சென்னை தினங்கள்..
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கு
அந்நியமாய்த் தெரிகிறது சென்னை.
சில நேரங்களில் அநியாயமாய்க் கூட..
வாழக் கற்றுக் கொடுக்காத சென்னை
வாழ்க்கையைக் கற்றுத் தந்தது.
கோடி மக்களினும்
என் தனிமையினை
அப்பட்டமாய்ச் சுட்டுகிறது.
பகலிற்கொரு நேர்முகத்தேர்வு,
இரவிற்கொரு பாட்டில் மதுவுமாய்க்
கழிந்து கொண்டிருக்கிறது
என் சென்னை தினங்கள்..
முதல்நாள் இரவில்
அரைபோதையில்
கிறுக்கிய என் கவிகள்
காலையில் என்னைப் பார்த்து
சிரிக்கின்றன...
அதே நாள் இரவு
அரைபோதையில் நான்
சிரிக்கிறேன்.
நடுநிசியில்
என்னையும் என் கவிகளையும் பார்த்து
உரக்கச் சிரித்துக் கொண்டிருக்கிறது
சென்னை.
அர்த்தமற்ற இந்தச் சிரிப்புகளுக்கு
உரை இயற்றுகிறது சென்னை.
தன்னைத் தொட்டவனைத்
தனதாக்கிக் கொள்ள்ளும்
சென்னை,
என்னிடம் மட்டும்
தோற்றுக் கொண்டேதான் இருக்கிறது...
அதன் பார்வையில்
தோற்றுக் கொண்டிருப்பது நான் தானோ..?