அந்தக் கவிஞனைப் போற்றுங்கள்! (எழுத்து.காம் தோழர்களுக்கு)
என் அன்புக்குரிய
தோழர்கள் மற்றும் தோழிகளுக்கு
ரௌத்திரனின் வணக்கங்கள்!
நான் உங்களிடம் கொஞ்சம் மனம் திறந்து பேச
ஆசைப்படுகிறேன்!
எனக்குள் இருக்கும் ஆதங்கங்கள் ஆயிரம்!
எழுத்து.காம் பொருத்தவரை
சிவனின் கழுத்தில் தங்கிவிட்ட விஷத்தைப் போல
எனக்குள் ஒரு கசப்பு நிரந்தரமாகத் தங்கிவிட்டது.
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கப் போகிறோம்?
தயவு செய்து,
குட்டைகளில் முத்துக்கள் இருப்பதாகக்
குறிப்பெழுதுவதை நிறுத்துங்கள்!
சருகுகளில் தேனிருப்பதாகச் சாதித்ததெல்லாம் போதும்!
தாகம் தணித்து உயிர் வளர்க்க முடியாத உப்புக் கடல்களின்
வீராப்புச் சத்தங்களை வியந்ததெல்லாம் போதும்!
அப்பழுக்கற்றச் சிற்றோடைகளின் சலசலப்புகளுக்கு
கொஞ்சம் காது கொடுங்கள்!
நீங்கள் கொட்டிவிட்டுச் செல்வது மதிப்பெண்களையா
குப்பைகளையா என்று எனக்குச் சந்தேகம் எழுகிறது.
ஏனெனில் இங்கே நல்ல கவிதைகள் எல்லாம்
நாதியற்ற அனாதைகளாய் நலிந்துகொண்டிருக்கின்றன.
தரம் குறைந்த எழுத்துக்கள் சிரம் உயர்த்தி நடப்பது
சகிக்க முடியாத சித்திரவதையாக இருக்கிறது!
எவரையும் புண்படுத்தும் நோக்கங்கள் எனக்கில்லை!
கோபுரங்களை விடக் குப்பைமேடுகள்
உயர்ந்துவிடுவதாலேயே இங்கு
கோபுரங்களைப் புறக்கணித்துவிட்டு
குப்பைமேடுகளுக்கு தீபாராதனைகள் நடத்தப் படுகின்றன.
ஆம் சிறந்த கவிதைகளுக்கான பரிசு பற்றிதான்
பேசுகிறேன்.
உடனே,
"அப்படியென்றால் பரிசு பெறுபவையெல்லாம்
கவிதைகள் அல்ல குப்பைகள் என்கிறாயா?"
என்ற கேள்வியைக் கேட்காதீர்கள்!
நானும் உங்களைக் கேட்கிறேன்.
இங்கு பரிசு பெறும் கவிதைகள் அத்தனையும்
மற்றக் கவிதைகளைவிட உயர்ந்தவையா?
மனச்சாட்சியைத் தொட்டுப் பதில் சொல்லுங்கள்!
இதில் நான் நடுவர் குழுவைக் குற்றச் சாட்டவில்லை.
காரணம் மதிப்பெண்களை இடுவதே நாம்தானே?
வெட்டியவனை விட்டுவிட்டுக்
கத்தியைக் கூண்டில் ஏற்றுவது அறிவுக்கு அழகாகாது!
இங்கு பிரச்சினை பரிசு பெறுவதல்ல!
நல்ல கவிதைகள் எல்லாம் படிக்கக் கூட
நாதியின்றி கிடப்பதுதான்!
அதுதான் எனது கோபத்திற்கான அடித்தளம்!
இன்னும் இங்கு பல நல்ல கவிஞர்கள்
வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்கள்!
எனது கவிதைகள் பாராட்டப்பட்ட அளவுக்கு கூட
எனக்கு முன்னால் இருந்து எழுதிவரும் நல்ல
கவிதைகளும் கவிஞர்களும் போற்றப்படவில்லை!
தயவு செய்து
நல்ல கவிதைகளுக்கு மதிப்பெண்கள் போடாவிட்டாலும்
பரவாயில்லை. படித்துப் பாராட்டுங்கள்!
ஒரு உண்மையான கவிஞனுக்கு பரிசுகளைவிட
பாராட்டுகளே முக்கியம்!
அதைத்தான் அவனும் விரும்புவான்!
நானும் அத்தகையவனே!
பரிசெல்லாம் எவனுக்கு வேண்டும்?
அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்!
எமக்கு வேண்டாம்!
ஒரு கலைஞனோ கவிஞனோ எதிர்பார்ப்பதெல்லாம்
தன் கலைக்கும் மொழிக்குமான அங்கீகாரத்தை மட்டுமே!
குறைந்த பட்சம் அதையாவது கொடுங்கள்!
இந்த விஷயத்தில் நான் சற்று மாறுபடக் கூடியவன்!
என்னையும் என் தமிழையும் நீங்கள் அல்ல
இந்த உலகமே அங்கீகரிக்காமல் போனாலும்
நான் அதைப் பெரிதாய் எண்ணி வருந்தமாட்டேன்!
"இவன் சூரியன்.
இந்தச் சூரியனுக்கு
குருடர்களின் அங்கீகாரம் தேவையில்லை"
என்று
ஏற்கெனவே நான் சொன்னது போல,
எனக்குள் அந்த கர்வம் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும்.
ஏனெனில் எனக்குள் இருப்பது வெறும் திமிரல்ல!
அது எனக்குள் தகித்துக்கொண்டிருக்கும்
தமிழின் தீப்பிழம்பு!
நாளை என் உடம்பை எரிக்கப்போகும் சுடுகாட்டுத் தீக்கும்கூட
அந்தத் திமிரைத் தொட்டுப்பார்க்கும் துணிச்சல் கிடையாது!
அது காலங்கள் கடந்து அந்தக் காலத்தைப் போலவே
கர்வமாய் நிற்கும்!
இந்தத் தளத்தில் இருக்கும் சில நல்லகவிஞர்கள்,
அதிலும் குறிப்பிடத் தக்க கவிஞர்களில்
"தமிழ்தாசன்"-னும் ஒருவர்!
'வேண்டுவன வேண்டாதன இல்லான்'
கடவுள் மட்டுமன்று கவிஞனும்தான்!
இந்தத் தளத்தில் எனக்கும் வேண்டியவர்களும் கிடையாது
வேண்டாதவர்களும் கிடையாது.
எல்லோரையும் நான் சமமாகவே கருதுகிறேன்!
நான் யாருக்காகவும் பரிந்து பேச வருவதாக
எவரும் நினைத்துவிடக் கூடாது!
இதை நான் துணிச்சலாக ஆயிரம் சபைகளில்
சொல்வேன்.
"எவனுக்கும் கூஜா தூக்கவேண்டிய அவசியம்
எனக்கில்லை"!
திரு.தமிழ்தாசன் இதுவரை எனது கவிதைகள்
எதையும் படித்ததும் இல்லை, பாராட்டியதும் இல்லை.
ஆனால் அவருடைய அனைத்துக் கவிதைகளையும்
நான் படித்திருக்கிறேன்.
அற்புதக் கவிஞன் அவன்!
அபாரமான சிந்தனைகள்!
அகண்டாகாரமான கற்பனைகள்!
சிறப்பான சொல்லாட்சி!
செம்மையான வடிவங்கள்!
போற்றப்பட வேண்டிய கவிஞன் "தமிழ்தாசன்"!
அவரிடமும் குறைகள் இருக்கலாம்.
குறைகளற்றவன் எவனும் கிடையாது!
அப்படிச் சின்னச் சின்னக் குறைகளையெல்லாம்
பார்ப்பதானால், "மஹாத்மா காந்தி"-யைக் கூட
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி
"இவனெல்லாம் மனிதனே இல்லை.மஹாத்மா என்கிறீர்களே!"
என்று மணிக்கணக்கில் என்னால் வாதாடவும் முடியும்.
எனது பக்க நியாயத்தை நிரூபிக்க நூறு
வ்ரலாற்றுச் சான்றுகளையும் முன்வைக்க முடியும்!
"சாத்விக ராட்டையும் சவத் துணிகளும்"
என்ற தலைப்பில் இப்போது நான் எழுத
திட்டமிட்டிருக்கும் புத்தகத்தின் கருவே அதுதான்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியம்
ஏற்படுத்திய எதிர்விளைவுகள் குறித்த ஆராய்ச்சிப்
புத்தகம்!
"ஏ கவிஞனே!
உன்
உடலை எரிப்பதற்காய்க் குவிக்கப்பட்ட
விறகுகளோடு
உன்னைப் பற்றிய விமர்சனங்களும்
சாம்பலாகிவிட்டதாய்ச்
சுகக் கனவு காண்கிறாயா நீ?
இல்லை!
இதோ!
என் தலைமுறையிலும்
உன்னைப் பற்றிய விமர்சனங்கள்!
மதுவிலே தள்ளாடியதால்
நீ
மகாகவி இல்லையாம்!
அதுசரி.
அவர்கள் எப்படி
அறிவார்கள்?
நீ மட்டும்
தள்ளாடாமல் இருந்திருந்தாயெனில்
நிச்சயம்
தள்ளாடி வீழ்ந்திருக்கும்
தமிழென்று.....
அவர்களெப்படி
அறிவார்கள்?"
என்று எனது "கண்ணதாசன் துதி"யில்
நான் கண்ணதாசனுக்கு வக்காளத்து வாங்கியது போல!
குற்றம் குறை இரண்டையும் சீர்தூக்கிப் பார்.
எது அதிகமோ அதை எடுத்துக் கொள்!
என்பது வள்ளுவன் வாக்கு.
அப்படிப் பார்க்கின் "திரு.தமிழ்தாசன்" கவிதைகள்
அபாரமானவை. போற்றப்பட வேண்டியவை.
"தெரியும். நாங்களும் தமிழ்தாசனின் கவிதைகளை
பாராட்டியுள்ளோம்" என்று சிலர் வாதாடலாம்!
எத்தனைபேர் என்பதே என் கேள்வி!
பொள்ளாச்சி அபி?
சீர்காழி சபாபதி?
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா?
சங்கரன் ஐயா?
மலர்மதி?
ம், இன்னும்?
இன்னும் ஒன்றிரண்டு பேர் இருக்கலாம்!
அவ்வளவுதானே?
"அவன்
பிணத்தில் மொய்த்த
ஈக்களின் அளவில் கூட
அவன்
பிணத்தின் பின்னால் போன
ஆட்களின் எண்ணிக்கை இல்லை"
என்ற வைரமுத்துவின் கவிதைதான்
நினைவுக்கு வருகிறது.
பாரதியின் பாடைக்குப் பின்னால் போனவர்களின்
எண்ணிக்கை பத்து கூட இல்லையே!
அந்த உலகமகா கவிஞனுக்கு அந்த மரியாதையே அதிகம் என்கிறீர்களா?
அது போலத்தான் இதுவும்!
"இதுவரை பரிசு பெற்றவர்கள்" பட்டியலையும்
பார்த்தேன். அந்தக் கவிஞனின் பெயரில்லை.
ஏன்? பரிசு பெறும் தகுதி அவன் கவிதைக்கு இல்லையா?
எவர் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.
உண்மையில் இதுவரை பரிசு பெற்ற
அத்தனைக் கவிதைகளைக் காட்டிலும்
"தமிழ்தாசன்"-னின் கவிதைகள் உயர்ந்தவை.
நான் முன்பே சொன்னது போல,
பரிசு கிடைக்கச் செய்யாவிட்டாலும்
நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் போற்றுங்கள்!
திரு.காளியப்பன் எசேக்கியல் அவர்களின் கவிதைகளிலும்
பல அற்புதக் கவிதைகள் உள்ளன.
அவையும் பெரிதாக மதிக்கப் படவில்லை!
"உண்மைத் திறமெனில்-அதை
வெளிநாட்டான் வணக்கம் செய்தல் வேண்டும்"
என்றான் பாரதி.
ஆனால் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
நமக்குள்ளேயே புகழ்பாடிக் கொண்டிருக்கிறோம்!
அவ்வளவுதான்!
என் அன்புத் தோழர் தோழியரே!
தயவு செய்து நல்ல கவிஞர்களைப் போற்றுங்கள்!
"தமிழ்தாசன்" அவர்கள் போற்றப்படவேண்டிய,
கவனிக்கப்பட வேண்டிய கவிஞன் என்பது
என் இறுதி முடிவு!
இனி உங்கள் விருப்பம்!
-------------ரௌத்திரன்