யார் கவிஞன்?

”தீட்டியவாசினோடு மதுரஞ்சித்திரம் வித்தாரம்
பாட்டிவையாருமெச்சப் பாடுவோன் கவியென்றாகும்”

ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் யாவரும் வியக்கும்படி பாடுவோன் கவியாவான்.

மரபுக்கவிதை எழுத தகுந்த கல்வியும், தனிப் பயிற்சியும் தேவை. நிறைய இலக்கியங்களைப் படித்திருக்க வேண்டும். இலக்கணம் கற்றிருக்க வேண்டும். வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா என்ற வெவ்வேறு கவிதை இலக்கணங்களை அறிந்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இறையருளும், தாயின் கருவிலேயே மரபு வழியாகப் பெற்றிருக்க வேண்டும்.

புதுக்கவிதை எழுத தனியாக இலக்கணமும், விதிகளும் பெரிதாக இல்லை. உரைநடையாக எழுத நினைத்ததை நான்கில் ஒரு பங்காகச் சுருக்கி, சொல்லும் செய்தியை சுருங்கச் சொல்ல வேண்டும். சொற்களை அலங்காரமாகவும், பொருள் உணரும்படியும் அமைக்க வேண்டும்.

கவிதை எழுத விருப்பம் உண்டு. ஆனால் எப்படி வருமோ என்ற கவலை. முதல் கவிதையே சிறப்பாக அமைய வேண்டும் என்ற கட்டாயமில்லை. சித்திரமும் கைப்பழக்கம் என்ற பழமொழிக்கேற்ப, பழகப்பழக, எழுதஎழுத சிறப்பாக அமையும். எதுகை மோனைகள் தானே வந்து விழும். ஒரு சிலருக்கு இயற்கையிலேயே எழுத நினைத்தவுடன் சொற்கள் கோர்வையாய் வந்து கொட்டும். வேறு சிலர் சொற்களை யோசித்து, அதை அடுக்கி, மாற்றியமைத்து, முழு வடிவம் தருவர்.

நன்கு யோசித்து, கவிதை உணர்த்தப்போகும் உணர்வு என்னவென்ற தெளிவும், எழுத எண்ணும் கருத்து என்னவென்றும் தெளிவாக முடிவு செய்து, குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும். கைப்பையில் சிறிய குறிப்பு புத்தகமும், பென்சிலும் வைத்திருந்தால் நல்லது. பயணங்களின் போது குறிப்பெடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும். எல்லோருக்கும் புரியும்படியான சொற்களை மட்டும் பயன்படுத்தினால் நலம்.

கருத்தில் தெளிவு வேண்டும். ஆரம்பத்தில் நீண்ட கவிதையை முயற்சித்தல் வேண்டாம். சிறிய அளவில் 12 வரிக்குள் வரும்படி பார்த்துக் கொள்வது நல்லது. எழுதியவுடன் பதிவு செய்யவோ, பத்திரிக்கைக்கு பதிவு செய்யவோ அனுப்ப வேண்டாம். தேவைப்பட்டால் கருத்துக்களில் மாற்றம் செய்ய விரும்பலாம். எழுத்துப் பிழைகளை சரிசெய்யலாம். பத்திகள் அமைப்பில் கட்டுக்குள் கொண்டு வரலாம். தாளில் எழுதித் திருத்துவதை விட, கணினியில் பதிவு செய்தால், மாற்றியமைப்பதும், ஒழுங்குபடுத்துவதும் எளிது.

நட்பு, காதல், மகிழ்ச்சி, வாழ்க்கை, சோகம், காதல் தோல்வி, நகைச்சுவை போன்ற கருத்துக்கள் இடம் பெறலாம். ஒரு நேரத்தில் ஒரு பொருள், சில சமயங்களில் இரு கருத்துக்களை ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் அமைக்கலாம்.

குறிப்பெடுத்துக் கொண்ட பொருளை, கருத்தை இப்பொழுது கவித்துவமான சொற்களைப் பயன்படுத்தி வாக்கியமாக, வரிகளில் அமைக்கப் பழக வேண்டும். சந்தத்துடனும், எதுகை மோனையுடனும் அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு பத்தியிலும் வரிகள் 2, 5 4, 7 என்று அமைந்தால், பார்த்தவுடன் படிக்கத் தோன்றாது. வரிகளைக் கூட்டியோ, குறைத்தோ ஒவ்வொரு பத்தியும் சமமான வரிகளுடன் அமைந்தால் அழகுற இருக்கும். பத்திகளைப் பிரித்து, கருத்துக்களை அடுக்கி, கடைசியில் முத்தாய்ப்பாக முடிவையும் சொல்லவேண்டும்.

வசந்த வாசல் கவிமன்றத் தலைவர் கோவை கோகுலன், ‘கவிதை, கதை எழுத புலமை மட்டும் இருந்தால் போதாது, நல்ல இலக்கிய ரசனையும், கற்பனைத் திறனும் இருக்க வேண்டும்’ என்கிறார். மேலும், ’பழந்தமிழ் இலக்கியங்களையும், நவீன இலக்கியங்களையும் படித்து இலக்கிய ரசனையை வளர்த்துக் கொள்பவர்கள் சிறந்த கவிஞர்களாக, எழுத்தாளர்களாக வளர முடியும்’ என்கிறார்.

கவிதை எழுதலாம் வாங்க!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-12, 10:58 am)
பார்வை : 334

மேலே