கோபத்தோடு கிடக்கிறது பகைமீதான என் வன்மம்

முற்றத்து கனகாம்பரப்பூ விரியும்
அந்த,
தாயக மண்ணின் விடிகாலை
இயற்கைப் பரணில்
வைக்கப்பட்டிருக்கும் அழகு பாத்திரமாய் . . .!


போரின் தாண்டவத்தில்
நிலவும்
அச்ச சலனத்தில்
நான் உன்னை தேடுவதும்
நீ என்னை தேடுவதும்
தொடர்ந்த படியாயுள்ளது போராகவே !

நான்
பேசுகின்ற புரட்சிய வாசகங்களையெல்லாம்
சிரிப்போடு
ஏளனம் செய்யும் நீயே
பயிற்சி பாசறையில் !

பெருமையில்
என் மனமே துவக்கு தூக்குகிறது,
உன் நீண்ட காத்திருப்பு
பாசறையில்
காலம் கழிப்பதற்காகவோவென
மகிழ்கிறது இதயம் !

பள்ளிக்கூட நாட்களில்
படைகள் திரட்டும்,
என் தேசக் கடமையை
நீயே
நிராகரித்தவள்
இன்று நீயே . . . .!

களத்திலாடி எம்மவர் வெற்றிகொண்ட
அந்த காலை நேரக்
களச் செய்தியை
நிதர்சனமாய் சொல்லி நின்றது.
எங்கள்
வகுப்பறையின் வேப்பமர குயிலும்,
களத்திலிருந்து வந்த காற்றும் !

இதோ !
சேதி சொல்லுமொருவர்
எங்கள் பள்ளிநோக்கி வருகிறார்,
உன் வீர மரணத்தின் முன்
நீ பகைவீழ்த்திய,
கதைகள் சொல்லி
வீரம் விதைக்கிறார்,
ஊர் முழுதும்
உன்னை கூப்பி தொழுகிறார் !

பெருமையில்
திகைப்பதுவிதுவே முதல் முறை,
உன்னை பற்றிய வகுப்பறை
நினைவுகள்
எதிரியின் சுடுகலனாய்
என்னை தாக்கியபடி . . .!

முகம் மலர்ந்து போய்
சிரிக்க விரும்பாது,
கோபத்தோடு கிடக்கிறது
பகைமீதான
என் வன்மம்!

நீ வைத்திருந்த அதே
ஆயுதம் தான்
இப்போதும்
என் காவலரணில் !

உள்ளி கண்ட இடத்தில்
பிள்ளைப் பெறும் பரம்பரையென்றால்.
இந்த நாளில் நானும் கயவன்
கால் கழுவி இழிவு வாழ்க்கை வாழ்ந்திருப்பேன் !
வேண்டாம் அந்த இழிவு நிலை .

பகைவீளும் சத்தம் கேட்கிறதா
என் சுடுகருவி
பணியைத் தொடங்கியது பார் !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (29-Sep-12, 3:42 pm)
பார்வை : 207

மேலே