வைரமுத்து கவிதை ( 4 . மதுரை )

வைரமுத்து அய்யா எழுதிய மதுரை பற்றிய கவிதை இது எனக்கு பிடித்த கவிதை இது நண்பர் அகமது அலி அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் இதனை பதிவிடுகிறேன். நண்பர் அகமது அலி அவர்களுக்கு நன்றி...

மதுரை !

பாண்டியர் குதிரைக்
குளம்படியும் - தூள்
பறக்கும் இளைஞர்
சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர்
சொல்லடியும் - இளம்
தோகை மாகம்
நெல்லடியும் !
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப்பூ மதுரை .........................


நீண்டு கிடக்கும்
வீதிகளும் - வான்
நிமிர்ந்து முட்டும்
கோபுரமும் !
ஆண்ட பரம்பரை
சின்னங்களும் - தமிழ்
அழுந்தப் பதிந்த
சுவடுகளும் !
காணக் கிடைக்கும் பழமதுரை - தம்
கட்டுக் கோப்பால் இளமதுரை .................


தென்னவன் நீதி
பிழைத்ததனால் - அது
தெரிந்து மரணம்
அழைத்ததனால் !
கண்ணகி திரிந்து
எறிந்ததனால் - அவள்
கந்தக உலையில்
எரிந்ததனால் !
நீதிக் கஞ்சிய தென்மதுரை - இன்று
ஜாதிக் கஞ்சும் தொன்மதுரை ....................


தமிழைக் குடித்த
கடலோடு - நான்
தழுவேன் என்றே
சபதமிட்டேன் !
அமிர்தம் பரப்பும்
வையை நதி - நீர்
ஆழி கலப்பது
தவிர்ப்பதனால் !
மானம் எழுதிய மாமதுரை - இது
மரபுகள் மாறா வேல்மதுரை.................


மதுரை தாமரைப்
பூ என்றும் - அது
மலர்ந்த இதழேத்
தெரு என்றும் !
இதழில் ஒட்டிய
தாதுக்கள் - அவை
எம்குடி மக்கள்
திரளென்றும் - பரி
பாடல் பாடிய மால்மதுரை - வட
மதுரா புரியினும் மேல்மதுரை........................


மீசை வளர்த்த
பாண்டியரும் - பின்
களப்பரர் பல்லவர்
சோழர்களும் - மண்
ஆசை வளர்த்த
அந்நியரும் - அந்த
அந்நியரில் சில
கண்ணியரும்
ஆட்சி புரிந்த தென்மதுரை
மீனாட்சியினால் இது பெண்மதுரை....................


மண்ணைத் திருட
வந்தவரை - தம்
வயிற்றுப் பசிக்கு
வந்தவரை - செம்
பொன்னைத் திருட
வந்தவரை - ஊர்
பொசுக்கிப் போக
வந்தவரை - தன்
சேயாய் மாற்றிய தாய்மதுரை - அவர்
தாயாய் வணங்கிய தூய்மதுரை ............................


அரபு நாட்டு
சுண்ணாம்பில் - கரும்பு
அரைத்துப் பிழிந்த
சாறூற்றி
மரபுக் கவிதை
படைத்தல்போல் - ஒரு
மண்டபம் திருமலை
கட்டியதால் !
கண்கள் மயங்கும் கலைமதுரை - இது
கவிதைத் தமிழின் தலைமதுரை.................


வையைக் கரையின்
சோலைகளும் - அங்கு
வரிக்குயில் படிய
பாடல்களும் ,
மெய்யைச் சொல்லிய
புலவர்களும் - தம்
மேனி கறுத்த
மறவர்களும்
மிச்ச மிருக்கும் தொன்மதுரை - தமிழ்
மெச்சு பிடிக்கும் தென்மதுரை...................


போட்டி வளர்க்கும்
மன்றங்களும் - எழும்
பூசை மணிகளின்
ஓசைகளும் - இசை
நீட்டி முழங்கும்
பேச்சொலியும் - நெஞ்சை
நிறுத்திப் போகும்
மழையொலியும் !
தொடந்து கேட்கும் எழில்மதுரை - கண்
தூங்கா திறுக்கும் தொழில்மதுரை.........


நெஞ்சு வறண்டு
போனதனால் - வையை
நேர் கோடாக
ஆனதனால்
பஞ்சம் பிழைக்க
வந்தோர் - நதியை
பட்டா போட்டுக்
கொண்டதனால்
முகத்தை இழந்த முதுமதுரை - பழைய
மூச்சில் வாழும் புதுமதுரை......................

எழுதியவர் : வைரமுத்து (13-Oct-12, 5:01 pm)
பார்வை : 5594

மேலே