முதிர்கன்னி

அஞ்சனம் அழகாய் தீட்டி
அரிதாரம் அளவாய் பூசி
அந்தி விழும் அருவியுடன்
அசைந்து நான் போகையில்....

தென்றல் நடை பயிலுதோ
தேருமிங்கே வந்ததோ
என்றெனையே சுற்றி வந்தது
எத்தனை எத்தனை பேரோ....

மின்னல் என் பார்வையாம்
மேகாரம் என் மேனியாம்
மேவிய அழகை மெச்சிப் பேசி
கூவிய கூட்டமெங்கே..?

சாலையெங்கும் சயனித்து
வாழ்க்கை முழுவதும் பயணித்து
வருவேனென்று வாக்களித்த
வாலிபர்கள் ஓட்டமெங்கே..?

பெண் பார்க்கும் படலத்தில்
புண்ணாகும் இதயத்தில்
பூவை வைத்தவர் யாருமில்லை
பூவையை சூட எவருமில்லை..

ஜாதகத்தின் பாதகத்தில்-பல
சாதகங்கள் நழுவிப் போக
பணமென்னும் அரக்கனாலே
பாவி இன்னும் கன்னியாக....

கல்யாணச் சந்தையில்
கண்மூடிகளின் மந்தையில்
எத்தனை நாள் இன்னும் போராட்டமோ?
எப்போது என் வாழ்வில் தேரோட்டமோ.?

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (6-Dec-12, 7:58 am)
பார்வை : 257

மேலே