எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பேண்டா .... சிறிய வயதில் இருந்தே எனக்கு ஒரு...

நண்பேண்டா ....




சிறிய வயதில் இருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம். என்னன்னு நிதானமா கேளுங்க.

"எங்கே இந்த காரியத்திற்கு போனாலும் நேரத்திற்கு போய் விடுவேன்'.

இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த உனக்கு எப்படி இந்த கெட்ட பழக்கம் என்று நீங்கள் நிறைய பேர் கேட்பது தெளிவாக கேட்கின்றது. அது ஒன்னும் இல்லை.



பள்ளி கூட காலத்தில் தேசிய மாணவர் படையில் (National Cadet Corps) நான் இருக்கையில் ஒரு நாள் அதற்கான வகுப்பிற்கு தாமதமாக போக, அந்த NCC மாஸ்டர் சரியான தண்டனை கொடுத்து விட்டார். அன்று அவரிடம் பெற்ற தண்டனையில் இருந்து கற்று கொண்ட பாடம் தான் இது.

அப்படி என்ன மோசமாக அடித்து விட்டாரா என்று கேட்பீர்கள்? நல்ல கேள்வி தான். நெஞ்சில் அடித்து இருந்தாலும் பரவாயில்லை, வயிற்றில் அடித்து விட்டார். பொறுமை.. அவரை திட்டாதீர்கள், அவர் தன் கடமையை தான் செய்தார், தாமதமாக சென்ற என் மேல் தான் தவறு .

அந்த "வயிற்று அடியை" சற்று பார்ப்போம். பள்ளி நாட்களில் விடுதியில் தங்கி படித்து வந்த காலம் அல்லவா . விடுதியில் வாரம் முழுவதும் ஒரே மாதிரியான "வெங்காய சாம்பாரும் வேகாத சோறும்' தான் கிடைக்கும். இந்த மாதிரியான நாட்களில் 9 வது வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த "தேசிய மாணவ படையில்" சேரலாம் என்ற சேதியை என் நண்பன் ராதாகிருஷ்ணன் எடுத்து வந்தான். அந்த காலத்திலேயே சீருடை அணிந்த ராணுவ வீரர்களை கண்டால் மனதில் ஒரு தெம்பு. அந்த ஆர்வத்தில் அவ்வாறான சீருடையில் நாமும் இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசையும் நான் இந்த படையில் சேர காரணமாய் இருந்தது.

இந்த ஆசையோடு மற்றொரு ஆசை வேற...

விசு.. NCC' ல் சேரலாம் என்று இருக்கேன், நீயும் வரியா?

ராதா... நீ இரும்பை கூட மிதிக்க மாட்டேன்னு சொல்லி நடக்கற மாதிரியான சாந்தமான ஆள் ஆச்சே.. நீ எப்படி இதில் சேர போற?

விசு, விடுதியில் சாப்பிட்டு , சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு. அது தான் வாரம் ஒரு நாளாவது நல்ல ஒரு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடலாம் என்று இதில் சேர இருக்கின்றேன்.

புரியல ராதா, இதுக்கும் சாப்பாட்டிற்கும் என்ன சம்மந்தம்?

ஒ, உனக்கு விஷயம் தெரியாதா? ஒவ்வொரு புதன் NCC பயிற்ச்சி முடிந்தவுடன் பக்கத்தில் உள்ள "ரத்னா கபேயில் " (யாராவது ஊரை சொல்லுங்க, பார்ப்போம் ) அருமையான சாப்பாடு. மசாலா தோசை, உப்புமா, ஊத்தாப்பம் அந்த மாதிரி வகை வகையா வரும், வைச்சி தாக்கலாம்.

அடேங்கப்பா... சொல்லவே இல்லையே, "கரும்பு தின்ன கூலியா" என்று சொல்லி கொண்டே அவனோடு சேர்ந்து படையில் ஐக்கியம் ஆனேன்.


வாரம் ஒரு நாள் காக்கி உடை அணிந்து கொண்டு கம்பீரமாக மனதில் ஒரு "கமாண்டோ' என்ற நினைப்போடு பெருமையாக இருந்த நாட்கள்.
வாழ்க்கை நன்றாக போய் கொண்டு இருக்கும் போது, ஒரு நாள் இந்த
பயிற்ச்சிக்கு தாமதமாக செல்ல நேர்ந்தது.

அட்டென்சன்.. ஒய் ஆர் யு லேட்?

சாரி சர். மற்றவர்களோடு கால்பந்து விளையாடி கொண்டு இருந்தேன், நேரத்தை கவனிக்காமல் கோட்டை விட்டு விட்டேன். அதனால் தான் நேரமாகி விட்டது என்று உண்மையை சொல்லிவிட்டேன்.

(இந்த NCC மாஸ்டர், சரியான கறார் பார்ட்டி. "தவறு செய்வது மனித இயல்பு. செய்த தவறை உடனடியாக உணர்ந்து மன்னிப்பு கேட்டால் சிறிய தண்டனை தான். அதே தவறை மறைக்க பொய் சொன்னால், அந்த தண்டனை ஐந்து மடங்கு அதிகம் என்று எங்களுக்கு உணர்த்தியவர்").

சரி, இந்த மைதானத்தை ஐந்து முறை சுற்றி ஓடு, அது முடிந்த பின் என்னிடம் வந்து ரிப்போர்ட் செய்.

ஏற்கனவே கால்பந்து ஆடிய களைப்பினால் சிறிது சோகமாக ஓட்டத்தை துவங்கினேன். மாஸ்டர் மற்றவர்களின் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருந்தாலும் ஒர கண்ணால் என்னை பார்த்து கொண்டு இருப்பார். ஐந்தாவது சுற்று ஓடும் தருவாயில், "ரத்னா கபே" ஊழியர் ஒருவர் கூடையில் சாப்பாடை எடுத்து கொண்டு வருவதை பார்க்கையில் மனதில் ஒரு சின்ன ஆறுதல். எப்படியாவது ஓடி முடித்து சாப்பாடு நேரத்திற்கு போய் நன்றாக உண்ணலாம் என்று நினைத்து ஓடி முடித்து அங்கே சாப்பாடு பரிமாறும் இடத்திற்கு வந்தேன்.

சிறிது மழை. எடுத்து வந்த உணவு அனைத்தும், சற்று சூடாக இருக்கையில் வாழையிலையில் வைக்கபட்டு, பழைய செய்தித்தாளை வைத்து கட்டப்பட்டு இருந்தது. மழை நீர் அந்த பொட்டலத்தின் மேல் பட்டவுடன் .. அந்த தோசை, வாழை இலை மற்றும் செய்திதாளின் வாசனை மூன்றும் சேர்ந்து பசியை தூண்டியது.


வரிசையில் நின்று அவரவர் தம் தம் உணவை பெற, என் முறை வருகையில் , மாஸ்டர் அருகில் வந்து,

விசு,இன்றைக்கு தாமதமாக வந்தாயே, அதற்கு உனக்கு என்ன தண்டனை தரலாம், என்றார்!

மாஸ்டர், அதற்கு தான் ஐந்து சுற்று ஓட சொல்லி தண்டித்து விட்டீர்களே.. நான் பொய் கூட சொல்லவில்லையே.. அதற்கும் மேல் என்ன தண்டனை? ப்ளீஸ்,

என்று சொல்லி என் பார்வையை அந்த சாப்பாட்டு கூடையின் மேல் விட்டேன்.

நோ விசு, டுடே நோ பூட் பார் யு, ஐ யாம் சாரி,

என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் பேச்சுக்கு மறு பேச்சு இல்லையே , என்று சோகமாக தலையை திருப்பி மற்றவர்களை பார்த்தால், அவனவன், தன் தன் உணவை ருசித்து கொண்டு இருந்தான் .

தவறு நமது தான் என்று சொல்லி, தலையை கீழே போட்டு கொண்டே விடுதியை அடைந்தேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, நண்பன் ராதா வந்து சேர்ந்தான். அப்போது தானே ஒரு சில வகையாராக்களை சாப்பிட்டு இருப்பான் . அவன் உள்ளே நுழைந்ததும் அந்த மழை-இல்லை-தாள் வாசனை மீண்டும் வந்து தாக்கியது.

சாரி விசு..என்ன இருந்தாலும் மாஸ்டர் உன் "வயிற்றில் அடித்து" இருக்க கூடாது.

விடு, ராதா (அவன் இவ்வாறு சொல்லும் போது எனக்கு ஏறக்குறைய கண்ணீரே வந்து விட்டது), தவறு என் மேல் தான், இனிமேல் ஜாக்கிரதையா இருப்போம். இன்னும் அரை மணி நேரத்தில் விடுதி உணவு கிடைக்கும் அங்கே போய் கொட்டிகிறேன்.

என்ன விடுதியில் சாப்பிடுங்கின்றாயா? அப்ப நான் எடுத்து கொண்டு வந்ததை யார் சாப்பிடுவது?

புரியல ராதா..

விசு. உனக்கு இல்லை என்றவுடன் எனக்கு கிடைத்த தோசை -கிச்சிடியை பாக்கெட்டில் போட்டு கொண்டு கொஞ்சம் தண்ணியை மட்டும் குடித்து விட்டு வந்தேன், வா சாப்பிடலாம்,

என்று அவன் சொன்னதும், அடங்கி இருந்த கண்ணீர் அலை திரண்டு வெளியே வந்தது.

ராதா. யு டோன்ட் ஹவெ டு டூ இட். பட், தேங்க்யு சோ மச் போர் யுவர் லவ். யு ஆர் எ ரியல் ப்ரெண்ட்.

இருவரும் பங்கு போட்டு சாப்பிட்டு முடித்து கை கழுவி கொண்டு இருக்கையில் .. NCC மாஸ்டர் அங்கு வந்து சேர்ந்தார்.

அட்டென்சன்...

எஸ் சார்!

விசு, உன் தண்டனை ஒரு பாடம் சொல்லி கொடுக்க தான் நான் செய்தது. இந்தா உன் சாப்பாடு. தோசை - மற்றும் கிச்சிடி.

தேங்க் யு சார்.

இனிமேல், இந்த மாதிரி தாமதமாக வர கூடாது.

எஸ் சார்!

ஓகே விசு, நான் கிளம்பியவுடன் நீ இந்த சாப்பாட ராதகிர்ஷ்ணன் கூட பகிர்ந்து சாப்பிடு...

சார் ( என்று நான் சொல்ல ராதாவின் முகம் பேய் அறைந்தது போல் மாறியது, அந்த பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)

ராதா கிருஷ்ணா, நான் ஒரு மிலிடரி ஆள், எனக்கும் கீழே இருக்கும் ஒவ்வொரு வீரனின் வாழ்க்கைக்கும், உயிருக்கும் நான் தான் பொறுப்பு.
விசுவிற்கு சாப்பாடு இல்லை என்றுசொன்னவுடன் உன் தோசையும் கிச்சிடியும் உன் எதிரில் இருந்து மறைந்ததை நான் கவனித்தேன். உங்கள் இருவரின் நட்ப்பை பாராட்டுகிறேன். வாழ்க்கையிலேயும் சரி, போரிலேயும் சரி நாம் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவேண்டும்.

தேங்க் யு சார்.

சரி, ராதா கிருஷ்ணன் இப்ப உனக்கு என்ன தண்டனை தரலாம்

சார் ....(ராதா அழுதே விட்டான்)

நீ ஒரு காரியம் பண்ணு.

நாளை காலை மைதானத்தை ஒரு 10 சுற்று ஓடு.

சார்.. ப்ளீஸ், இந்த தவறை அவன் எனக்காக தானே செய்தான்.

அப்ப அந்த தண்டணைய உனக்கு தரவா?

எனக்கு தான் தண்டணைய ஏற்கனவே தந்து விட்டீர்களே சர்.

எஸ்... பட், ஹி நீட்ஸ் டு பி பனிஷ்ட். வேண்டும் என்றால் இப்படி செய்யலாமே?

என்ன சார்..

நாளை காலை ராதா பத்து சுற்று ஓடுவதற்கு பதிலா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு ஐந்து சுற்று ஓடுங்கள்.

சார்..

தட்ஸ் எ ஆர்டர். யு ஆர் டிஸ்மிஸ்ட். குட் நைட்.

குட் நைட் சார்.

அன்று பட்ட பாடு, அன்றில் இருந்து "இந்த நேரத்திற்கு போகும் கெட்ட பழக்கம்" என்னை தொற்றி கொண்டு விட்டது. இந்த பழக்கத்தினால் வந்த வினையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

www.visuawesome.com

பதிவு : விசு
நாள் : 4-Dec-14, 9:23 am

மேலே