எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புத் தோழமைகளே... உங்களுக்கு நன்றி சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும்...

அன்புத் தோழமைகளே...


உங்களுக்கு நன்றி சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் முகம் மகிழ்கிறேன்.  நேற்றோடு  நம் “எழுத்து” தளம் நுழைந்து ஒரு வருடங்கள் ஓடிவிட்டது. எங்கோ ஒரு கிராமிய மூலையில் இருந்த  நான் முதன் முதலாக எழுதியது இந்த தளத்தில்தான். இது என் தாய்வீடு. 

முதன் முதலாக இந்த தளம் நுழைந்த  நேரத்தை நெஞ்சில் நினைத்துப் பார்க்கிறேன்.  எங்கோ ஒரு மூலையில் களிமண்ணாய் இருந்த என்னை உங்கள் கருத்துகளில் செப்பனிட்டு  இந்த கிராமிய களிமண்ணுக்கு  உருவம் கொடுத்து உயர்த்தி இருக்கிறீர்கள். இதற்கு வெறும் ”நன்றி"என்ற மூன்றெழுத்து சொல் போதாது. இன்னும் அதற்கு இணையான வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் தனித் தனியான என் நன்றிகளை இதன் மூலம் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். 

ஆரம்பத்தில் நான் எழுதியவைகளையும், இப்போது நான் எழுதுபவைகளையும் பார்க்கிறேன். எனக்குள் பெரும் வித்தியாசத்தை காண்கிறேன்.இதற்கு முழுக்காரணம்  நம் தளப் பெரியோர்களின் வழிகாட்டலும், மற்ற சகோதர சகோதரிகளின் கருத்து உற்சாகமும்தான்.  இந்த தளம்தான் எனக்கு எழுத்து அரங்கேற்ற மேடையானது. பார்வையாளர்களாய் நீங்கள்தான் எனக்கு கருத்து எனும் கைதட்டல்கள் கொடுத்து  என்னை உயர்த்தினீர்கள், உயர்த்தி வருகிறீர்கள்.  நம் தளத்தில் எழுதுவதற்கு போட்டி இருந்தாலும், பொறாமை இல்லை. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அம்மா, அய்யா என்றுதான் எல்லோரையும் அழைக்கத் தோன்றுகிறது. காரணம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தன் மகனுக்கு, தன் சகோதரனுக்கு என்ன உற்சாகம் கொடுப்பார்களோ அதைவிட 100 மடங்கு உற்சாகத்தை தந்து என்னை உயர்த்தி வருகிறீர்கள். அதற்கு உங்களுக்கும்,எனக்கு எழுத மேடை தந்த நம் தளத்துக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.

உங்கள் கருத்துகளில் என்னை செதுக்கி செதுக்கி இப்போது ஓரளவு தேறிவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் சாதாரண கவிதை என்பதே எனக்கு அசாதாராணமாக தெரிந்தது. இப்போது இலக்கணக் கவிதைகளை இனம் கண்டுகொண்டு எழுத முடிகிறது. இதற்காக திரு கன்னியப்பன் அய்யாவுக்கும்,  வெண்பா சாரலர் என்று அன்போடு அழைக்கும் சங்கரன் அய்யாவுக்கும் இந்த ஏகலைவனின் பணிவான வணக்கங்கள்.

கதிரவன் பெருமை-உழவின் மகிமை, உழவனதிகாரம், சுந்தரக்கோதை, தரைமீது கோலமயில்,  போன்ற வெண்பாக்களையும் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்.  

திருக்குறளை எடுத்து உழவனதிகாரம் படைத்த நான் உங்களின் உற்சாகத்தால் புதிய முயற்சியாக இராமாயணத்தை   “இராமர் நடந்த மருத நிலப்பாதை” எனும் தலைப்பில் 20 வெண்பாக்களாக படைக்க முயற்சியையும் செய்திருக்கிறேன்.   
 எனக்குத் தெரிந்த விவசாயம் மற்றும் கிராமியம் கலந்து நான் எழுதும் படைப்புகளுக்கு வாழ்த்து தந்த  உற்சாகத்திலும், பலர் எழுதும் கவிதைகளை வாசித்து வாசித்தும் என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன் 

முதன் முதலாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக்  கொண்ட   நம் “எழுத்து” தளம் நடத்திய”மீண்டும் மீண்டும்” எனும் கவிதைப் போட்டியில் தளத் தோழர்களோடும்,  தமிழறிஞர்களோடு நானும் பங்குபெற்றேன். பள்ளிப் படிப்பை கூடபாதியிலேயே விட்டு வந்த கிராமியத்தவன் நானும் தமிழறிஞர்களோடு பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். அதற்கும் காரணம் நீங்கள்தான்.முதன் முதலில் நான் பெற்ற பரிசும் இதுவே அதைத் தொடர்ந்து வளர்ச்சிகளில் ஒவ்வொரு படியாக ஏறினேன். இல்லை நீங்கள்தான் ஏற்றி வைத்தீர்கள். 

 கிராமம் விட்டு வெளியே எங்கும் செல்லாத என்னையும் என் எழுத்து சென்னை வரை கொண்டு சேர்த்தது. 

தீவுத்திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில்  திரைப்படக் கவிஞர்கள். திரு அண்ணாமலை, திரு பிரியன் அவர்களின் கையால் என் கவிதை ஒன்று அரங்கேறிய நூலை பெற்றுக் கொண்ட சந்தோசம் வாழ்வில் மிகப் பெரிய தருணம்.அந்த மேடையிலும்  நான் எழுதிய கவிதையின் வரிகளை மேற்கோள் காட்டி சிறப்புரையாளர் சொன்ன போது என்னை உயர்த்திவிட்ட உங்களை மட்டுமே நினைத்து நெகிழ்ந்தேன்.

ஒவ்வொரு படியாய் உயர அதன் பிறகு என் தமிழ் மீது பற்று கொண்டு அமெரிக்க மின்னிதழனான “பாலசந்திரிகை” என்னை தத்தெடுத்துக் கொண்டது. மாதமிருமுறை வெளிவரும் இந்த மின்னிதழில் சிறுவர்களுக்கான பாடல் பகுதியை எனக்கு ஒதுக்கித் தந்து  நான் எழுதும் ஒவ்வொன்றையும் உற்சாகப் படுத்தி வருகிறது.

மேலும் தளம் இணைந்த இந்த ஒரு வருடத்தில் மொழிபெயர்ப்புக்காக நான் முயன்று ஓரளவு ஆங்கிலமும் கற்றுக்கொண்டேன். இப்போது ஆங்கிலத்திலும் ஓரளவு  எழுதமுடியும் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது. 
.
இதுவரை வேறு தளங்களில் கலந்துகொள்ள வழிமுறை தெரியாததால் வேறெந்த தளத்திலும் இணையாத நான் சென்ற வாரத்தில் என் எழுத்தின் உயரத்தை சுயமதிப்பீடு செய்து கொள்ள இரண்டு தளங்களில் இணைந்தேன். எழுதிய ஒவ்வொன்றுக்கும் பாராட்டுகள், பரிசுகள் என தினம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கும் உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

என் தொடரும் வெற்றிகளில் ஏணிப்படியாய் இருக்கும் இத்தள உறுப்பினர்களை என் வாழ்நாளில் என்றும் மறவேன். இத்தனை பரிசுகள், பாராட்டுகள், பட்டங்கள் பெற்றாலும் என் மனதளவில் அப்போதும்.இப்போதும் எப்போதும் என்றும் எல்லோர் மீதும் அன்பும், பாசமும் கொண்ட வெள்ளந்தியான கிராமத்தவன்தான்.  உங்களின் பாசத்தில் எப்போதுமே வாழும் பயிர்தொழிலாளன் தான்.

இத்தனை சுகங்களிலும் என்னை வாட்டி எடுத்து கொண்டிருக்கிறது என் உடன்பிறவா அன்புத் தம்பி ( udaya sun) உதயாவின் இழப்பு. 

முகம் பார்த்திராமல் எழுத்தின் பொங்கல் சாரல்களில் இணைந்திருந்த எங்கள் பாசக்கயிறுகள் அறுபட்ட அந்த நாட்கள் மனதுக்குள் இன்னும் கண்ணீர் தருணங்களாக இருக்கிறது.

இதே போல் அம்மா என்று நான் உரிமையோடு அழைக்கும் சியாமளா அம்மாவின் மகன் இறந்த செய்தி. 

 மின்னஞ்சல்களில் எழுத்துகள் மூலம் ஆறுதல் சொல்லி இருந்தாலும் அந்த வேதனையை ஒரு சகோதரன் படும் வேதனையைப் போலவே நானும் உணர்கிறேன். மகனை இழந்த தாயால்  ஆறுதல் அடைய முடியாதுதான். இருந்தாலும் இயற்கையின் இந்த அழிக்க முடியாத  சோகங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். மகனை இழந்த இரு தாய் தந்தையர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் ஆறுதலை தர என் கண்ணீர் துளிகளோடு ஆண்டவனை வேண்டுகிறேன்.அவர்கள் எப்போதும் நம்மிடையே இருப்பதாய் உணர்வோம்.   

என்றும் பணிவும் நன்றியுடன்
இராசேந்திரன்.

நாள் : 25-Aug-16, 11:00 pm

மேலே