கண்ணாடியாகும் கண்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

கண்ணாடியாகும் கண்கள் விமர்சனம். Tamil Books Review
எழுத்தாளர் திரு.நகுலனை பற்றிய அறிமுகம் திரு.சாரு நிவேதிதா அவர்களின் இலக்கிய கட்டுரை தொகுப்பின் வாயிலாக கிடைத்தது.நல்ல விரிவான அறிமுகம்...மற்றும் அறிந்திடாத புதிய பெயர்.

விரும்பி வாங்கினேன் -கண்ணாடியாகும் கண்கள் என்கிற கவிதை தொகுப்பினை.

படத்துடன் கூடிய கிட்டத்தட்ட அறுபது பக்கங்கள் அடங்கிய அழகிய கவிதை தொகுப்பு அது.

முதல் பக்கத்தில் எண்பது வயது முதிய ஒருவரை பார்த்தவுடனே மனம் நொண்டியது.....பழந்தமிழில் இருக்குமோ ,புரிந்திடாது போகுமோ என்று பல விதமான அச்சம் வேறு.பயத்தோடு படிக்க தொடங்கிய நான், ஒரு மணி நேரத்தில் விடாமூச்சில் படித்துமுடித்தேன்.

அதன்பின் இரண்டு மணிநேரம் பிரமித்து அமர்ந்திருந்தேன்.பெரியாரையும் ,புதுமைபித்தனையும் படித்த பிறகு ,இவர்களை விடவும் சிக்கனமாக யாரும் தமிழில் எழுதிவிட முடியாது என்று உறுதியாக நம்பி இருந்தேன்,இதுநாள்வரையில்.

இவ்வளவு சீக்கிரம் பொய்க்கும் என்று எதிர்பார்க்கவில்லை.ஆம்......,திரு.நகுலன் அவர்களின் எழுத்து என் முடிவை மாற்றிவிட்டது.எவ்வளவு சிக்கனம் ...வார்த்தைகளில்...
ஆனால், அக்கவிதைகளில் இருக்கும் அனுபவம் நூற்றாண்டு கடக்கும் வலிமை கொண்டது....

உதாரணத்திருக்கு, அக்கவிதொகுப்பில் எனக்கு பிடித்த, இரு கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1. " தேடி திரிந்ததை கண்டது
நாடி வந்தவனை கண்டபோதுதான்"

படித்தவுடன் கண்கள் ஏனோ பனித்துவிட்டன. எவ்வளவு எளிமையான வார்த்தைகள்...ஆனால் அது உரைத்த பொருள்.........என் வாழ்நாளில் இதை மறப்பேனா என்பது சந்தேகம்தான்.


2. " அலைகளை சொல்லி குற்றமில்லை
கடல் இருக்கும் வரை"

இங்கு அலை என்பது "கடல் அலையை " குறிக்கவில்லை.அதேபோல் கடலும் கடலை குறிக்க வில்லை.பின் எதைத்தான் இரண்டும் குறிக்கின்றன...?

அதில்தான் இருக்கிறது கவிதையின் அழகும்,கவியின் சாமர்த்தியமும்.

எண்ணம் அலையென்றால் மனம்தான் கடல்.
ஆசை அலையென்றால் உடல்தான் கடல்.
அன்பு அலையென்றால் தாய்மைதான் கடல்.

இப்படி உருவகபடுத்திகொண்டே போகலாம் இக்கவிதையினை.என் கண்களுக்கு இக்கவிதை ஆயிரம் ஆயிரம் வேர்களை கொண்ட ஒரு வித்தாகதான் தெரிகிறது.

இதுபோல் இன்னமும் ஏனைய கவிதைகள்.ஒவ்வொன்றும் மறதிக்கு சவால் விடுபவை.
நல்ல கவிதைகளை படிக்க விருப்பம் கொண்டவர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் அது.

வாழ்வில் உண்மைகள் புரிய புரிய வார்த்தைகளின் மேல் நம்பிக்கை குறைந்துகொண்டே வந்த ஒரு பொழுதில்தான் இக்கவிதைகளை நான் படித்தேன்.....மீண்டும் மனதில் நம்பிக்கை துளிர்விடுவதை உணர முடிகிறது.....எனவே நகுலனுக்கு நன்றி கூறும் விதமாக " நகுலனுக்கு நன்றிகள் " என்ற பெயரில் நான் புதுக்கவிதைகளை எழுதி அவற்றை நகுலன் அவர்களுக்கு சமர்பித்தேன்.அதனை எனது கவிதை படைப்பில் காணலாம்.நன்றி.

சேர்த்தவர் : kalkish
நாள் : 24-Jan-15, 8:54 pm

கண்ணாடியாகும் கண்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே