’இசையாய்’

(Tamil Nool / Book Vimarsanam)

’இசையாய்’

’இசையாய்’ விமர்சனம். Tamil Books Review
’இசையாய்’ என்ற அழகிய பெயரில் மிக அழகிய சிறு பெஞ்சில் சாய்ந்து நிற்கும் வயழின் கோட்டு ஓவிய அட்டைப்படம் - அற்புதமான கற்பனை சாதரண பார்வையிலேயே ஈர்க்கிறது..பேராசிரியர் .சந்திரிகா ராஜாராம் தான் ரசித்து உணர்ந்த இசைச் சாகரங்களுக்கு இசையஞ்சலிச் செலுத்துவிதமாக படைத்த இக் கட்டுரைகள் இவை. இசையறிவுப் படைத்தவர்களுக்காக மட்டுமல்ல இந்த பதிவுகள் .எங்காவது நீங்கள் காதில் கேட்கும் சிறு இசைக் கசிவினால், உங்கள் மனம் கரைந்து போயிருந்தால் இந்த வாசிப்பின் மூலம் அதை நமக்கு தந்த ரிசி மூலங்களான இசைச் சாகர மேதைகளுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாக நிச்சயமாக ஒவொருவரும் வாசிக்க வேண்டிய சுகானுபவம் இந்தக் கட்டுரைக் கதம்ப இசை விருந்து.


1.மகாகவி :

இசையில் நமது புரட்சிக் கவி சுப்பிரமணியப் பாரதியின் ஆழ்ந்த ஈடுப்பாட்டைப் பற்றி அறியும்போது அந்தப் பன்முகக் கவியின் இன்னொரு இசை முகம் இவ்வளவு நாள் தெரியாத என் போன்ற வாசிப்பாளருக்கு இது புதுமையாக இருக்கிறது .நமது மகா கவி “கவிதை இயற்றும்போதே அதைப் பாடலாக இசைத்தவாறு பாடிக்கொண்டேதான் இயற்றியிருப்பார் என்பது வெகுதெளிவு .சில பாடல்களுக்கு ராகங்களின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார்” ( பக் 8/ ) என்று நூலாசிரியர் கருதுவது பாரதியின் இசையுடன் பாடல்களைக் கேட்கும்போது உணர முடிகிறது இசையோடு கவியின் வரிகள் கலந்து , நம்முள் ஊடுறுவுவதே இதற்குச் சாட்சி.

2. அருணகிரி நாதர் :

திருப்புகழில் உள்ள இசை நயத்தை வியந்து போகும் ஆசிரியர் தன்னை மறந்துப் புராணக் கதை விளக்கத்திற்குள் மெல்ல மூழ்கித் திளைக்கிறார் ஆனாலும் பொருளுக்கும் - இசைக்கும் சேதாரமின்றிப் பாடப்படுவதே அவருக்கும் தரும் மரியாதையாக அழுந்த சொல்வது சிறப்பு.

3. பாரதிதாசன் கவிதைகளில் இசை நயம் :

( செம்மொழி மாநாட்டுக்காக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை )

எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் ஒன்று ! இசை உணர்வுகளுக்குத் தாய் போல அது ராகத்தை அதன் பராமரிப்பில் வளர்த்து எடுத்தால்தான் அதன் உல்லாசம் , கம்பீரம் ,மோஹனம் ,தாலாட்டு, வீரம் என அதன் உணர்வு தன்மைக்குத் தகுந்தார் போல உயிர்ப்பாய் வாழும் என்பதை எந்த ராகங்கள் எந்த உணர்வுடன் பொருந்தினால் அது பொருத்தம் எனப் பிரித்துப் பிரித்து நமக்கு ஆசிரியர் இசையை, எழுத்து ஆலாபனையாக அழகாக விளக்குகிறார்.

4.கோபால கிருஷ்ண பாரதி:

பெரிய புராணக் கதை காரைக்கால் அம்மை ,திருநீல கண்ட நாயனார் போன்ற பக்தி இலக்கியங்களை இசை நாடகமாக்கிய இந்த இசை ஞானியையும் அவர் தொண்டையும் நினைவு கூர்கிறார் ஆசிரியர்.

5. திருவாரூர் மஹாராஜா சுவாதித் திருநாள் :

ஓர்அரசர் இசையை , சங்கீத உறுப்படிகளை, கீர்த்தனைகளை, ராகங்களை,ஈசை நாடகத்தை ஏன் இசைநூலை , ரசிப்பவராக இருந்தால் அதி வியப்பில்லை ஆனால் இவையெல்லாம் சுவாதித் திருநாள் என்ற மன்னரே என அறியவைத்து நம்மை வியப்பூட்டுகிறார் ஆசிரியர்.

6. கவிகுஞ்சர பாரதி:

தமிழிசை வளர்ச்சியில் பாரதி (கவிகுஞ்சரம் இவருக்குக் கிடைத்த சிறப்புப் பெயர்) வித்வான் பட்டம் பெற்று இசை ,பாடல் ,பதங்கள், கீர்த்தனை எனப் பல வழிகளில் இசையையும், இசைவழியே இறைவன் ஆராதித்து மகிழ்ந்தவர் இவர் என்கிறது இந்தக் கட்டுரை.

7. சேத்ரக்ஞர் :

’பதங்களின் தந்தை’ எனப்படும் சேத்ரக்ஞர் இயல் இசை நாடகம் என்பதில் நாட்டியத்தைப் பற்றித் துளியும் தெரியாதவர்களுக்குப் புரிந்து கொள்ளும் ஆரம்பமாக அவர் பெருமைகளை அற்புதமாகக் காட்சி வர்ணையாக ஆசிரியர் அழகுபட விவரிக்கிறார் .

8. எம்.எம் .தண்டபானி தேசிகர் :

இசைக்கு முக்கியத்துவம் மிக்கப் பட்டிணத்தார் ,நந்தனார் திரைப்படங்களில் தனது இசை வளத்தால் காவியமாக்கியச் சென்ற நூற்றாண்டின் இசைப்பேரரசு தண்டபானித் தேசிகரைப் பற்றி இக்கட்டுரை நினைவு கூர்கிறது .

9. ஜி.என். பாலசுப்பிரமணியம் :

இந்த நூற்றாண்டில் பி.ஏ ஹானர்ஸ் ( ஆங்கிலம் ) படித்த இவர், இசையுலகுக்குள் தனது ஜென்ம இசை வாசனையில் ஈர்க்கப்பட்டு வந்தவர் இவராகத்தான் இருக்கும்.’ யாரிடம் இசை பயின்றாலும் மேடையில் கச்சேரி செய்யும் போது ஜி.என்.பி பாதிப்பும் தாக்கமும் அனைவரிடத்திலும் காணப்படும் ‘ ( பக்.41) என்று சொல்லும் அளவுகுக்கு இசையுலகில் நீங்கா முத்திரை பதித்தவர் இவர்.

10. ஆபிரகாம் பண்டிதர் :

ஓர் ஆசிரியர் மருத்தவரான கதையை விடச் சுருளி மலையின் கருணானந்த சித்தரின் வழிகாட்டலில் இசையுலகுக்கு அற்புதமான பரிசாக வந்தவர் இவர் .இவரின் மிகப்பெரிய முயற்சியில் இசை மட்டும் கௌரவம் பெறவில்லை அதன் கலைஞர்களும் மிகவே கௌரவிக்கப்பட்டதால் இவர்காலம் இசையின் பொற்காலம் என உணர்கிறோம் தன்னை ஆசீர்வதித்த சித்தரின் பெயரால் மிகுந்த உழைப்பில் ‘கருணா சாகரம் ‘இரண்டு இசை பொக்கிச நூல்களை இவர் அற்பணித்துள்ளார் என்கிறது இந்தக் கட்டுரை.

11 ஆழ்வார்கள் :

இறையின் ஐந்து பௌதீகங்களில் இரண்டாவதான காற்றின் ரூபம் இசையின் வெளிப்பாடு ! அதை நிரூபிப்பது போலப் பன்னிரு ஆழ்வார்களும் திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக 4000 பாடல்களும் கடவுளுடன் இசையெனும் மொழியில் பேசிக் கலந்ததனர் அவர்களின் பாடல்களில் உள்ள இசை நயத்தை வியந்து பேசும் ஆசிரியர் இங்குப் பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் ,பேயாழ்வார் ,திருமழிசையாழ்வார்,குலசேகர ஆழ்வார் ஆகியோரை பற்றி மட்டும் இங்கு ஆசிரியர் பேசுகிறார்.

12. எம்.எல்.வி :

இசையுலகம் தனக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் சில மனிதர்களைப் பூமிக்கு வரவழைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் எம்.எல்.வசந்த குமாரியை காலத்தால் மறக்க வாய்ப்பு இல்லை ஆமாம் ஜி.என்.பி போன்ற இசை மேதை நானே குருவாக இருக்கிறேன் என்று தேடிப் போவதுவும் , இசை சாகரங்கள் தனது இசையில் பாட அழைத்ததும் , சிந்தனையாளார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஆந்திராவின் ரிஷிவேலி பள்ளியில் 12 வருடம் இசை குருவாகப் பணியாற்றுவதுவும் எல்லோருக்கும் வாய்க்குமா என்ன ?

நூலாசிரியர் .சந்ரிகா ராஜாராம், எம்.எல்.வசந்த குமாரியின் ரசிகர் மன்ற செயலாளர் என்பதாலேயே எம்.எல்.வி அவர்களின் சீடர்களைச் சந்தித்து அவர்கள் குருவின் மனமார்ந்த அனுபவத்தைக் கேட்டுப் பெற்று நம்முடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை மிக எளிதாகப் பெற்று இருக்கலாம் இந்த வாய்ப்பு வேறு எவருக்கும் வாய்ப்பது சுலபமில்லை..

ஓர் இடத்தில் ஆசிரியர் ‘ மிக ஜனரஞ்சகமான (ஓரு இரவு திரைபடத்திற்காகப் பாடிய ) பாடலான ஓ சாமி அய்யா சாமி ஆவோஜி சாமி பாட்டையும் இவர்தான் பாடி இருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது ? ’ (பக்.65 ) என்று கேட்கிறார், நம்பத்தான் வேண்டும் அந்தப் பாடல் துவக்கமே அவர் தந்தை பெயரை ஞாபகப்படுத்துவதால் கூட அந்தப் பாடலை அவர் விரும்பிப் பாடி இருக்கலாம் அல்லவா ?

13. எம்.எஸ்.சுப்புலட்சுமி :

இசையைத் தவமாகச் செய்துவந்தார் ( பக்.79 ) அதனால் தானோ என்னவோ இன்றும் நம்மை இறையோடு லயத்தில் கலக்க பக்தி பாடல்களால் சுப்புலட்சுமி அவர்களின் பாடல்கள் வீடுகள் தோறும் கட்டிப்போட்டு வைத்து இருக்கிறது என்று சொன்னால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. .இந்திய பெரும்தலைவர்களின் புகழாரம் ,இந்திய அளவில் மிக உயர்ந்த விருதுகள் உலக அளவில் பாராட்டும் பட்டமும் அவரின் இசைப் பணிக்காக மட்டும் தேடிவரவில்லை .சதாசிவம் - சுப்புலட்சுமி தம்பதியினர் தாங்கள் ஈட்டிய பொறுள்களெல்லாம் எங்கிருந்து பெறப்பட்டதோ அங்கேயே திரும்பி தருகிறோம் என்று அற்பணித்தார்களே அந்த மாபெரும் மனங்க்களுக்குக் கிடைத்த கௌரவம் என்றால் தவறில்லை.


முடிவுரை :

வெகுதூர ரயில் பயணத்தில் தனியே செல்ல வேண்டுமே என்ற ஆதங்கத்தில் பயணிக்கத் தொடங்கும்போது ஒரு எதிர்பாராத சக பயணி, நம்முடன் பயணித்து, நாம் அறியாத இதமான இசை பற்றிப் பேசிப் புரியவைத்தால் மனம் எவ்வளவு சந்தோசப்படும் அந்தப் பிராயணத்தில் ? அப்படிபட்ட சந்தோசமாய் இந்த 13 கட்டுரைகளை நகர்த்துகிறார் பேராசிரியர் .சந்திரிகா ராஜாராம் அவர்கள்.

சேர்த்தவர் : krishnamoorthys
நாள் : 9-Feb-16, 8:43 pm

’இசையாய்’ தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே