நதியின் தரிசனம் - ”பாதை சரியாக இருந்தால்”

(Tamil Nool / Book Vimarsanam)

நதியின் தரிசனம் - ”பாதை சரியாக இருந்தால்”

நதியின் தரிசனம் - ”பாதை சரியாக இருந்தால்” விமர்சனம். Tamil Books Review
பாதை சரியாக இருந்தால் - ஒஷோ .
தமிழில் - வரலொட்டி ரெங்கசாமி .
கவிதா பப்ளிகேசன்ஸ்.

சீனாவின் பிரபலமான ஞானிகளில் ஒருவர் லாவோ ட்சுவின் புகழ் பெற்ற சீடர் ஷீவாங் ட்சு .அவரின் போதனைகளை, ஓஷோவின் நீண்ட ஆழமான பார்வையில் சொற்பொழிவாற்றிய பதிவின் நூலாக்கம்தான் இந்த ’பாதை சரியாக இருந்தால்’ தொகுப்பு . ..

ஓஷோ ஷீவாங் ட்சுவை , இயேசுவையும் ,புத்தரையும் விட அபூர்வமானவர் என்கிறார் .காரணம் அவர்கள் அதைச் செய் இதைச் செய் என்று செயலின் மேல் கவனம் செலுத்தினார்கள் .ஆனால் ஷீவாங் ட்சுவோ செயலின்மையை வலியுறுத்துகிறார்.மெய்ஞானத்தின் திறவுகோலாகச் செயலின்மை ஒரு தீர்க்கமான வழி என்கிறார். உங்களுக்குள் இயல்பாக இருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நீங்கள் மெய்ஞான மலர்ச்சி அடைவீர்கள் .இதற்கு அவர் புத்தரின் வாழ்வையே உதாரணமாகச் சொல்கிறார்.

சித்தார்த்தராக இருந்த புத்தர் சுயஞானம் பெற ஆறு ஆண்டுகள் முயற்சி செய்து ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட வெறுப்பிலிருந்தார் .தன் நம்பிக்கையை முற்றிலும் இழந்தார்.அந்த நிலையில் எல்ல முயற்சிகளையும் கைவிட்டார்.மெய்ஞான மலர்ச்சிப் பெறும் நாளுக்கு முந்திய நிலையில் சித்தார்த்தர் எல்லா முயற்சிகளையும் கை விட்டார்.முழுச் சூன்ய நிலையில், அன்று இரவு செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற செயலின்மையை உணர்ந்து, கனவுகளே இல்லாத எந்த இயக்கத்தினாலும் தூண்டுதலே இல்லாத அன்றைய இரவு தூக்கம் அமைந்தது.அதை ஜென் தத்துவம் சடோரி நிலை என்கிறது . மனமற்ற நிலை என்பதன் முதல் அனுபவம் – சடோரி என்று இதைக் கூறுவார் ஓஷோ இதையே சமாதி நிலை என்று நமது ஞானமார்க்கம் சொல்கிறது .அன்றைய இரவில்தான் சித்தார்த்தர்ப் புத்தராக மலர்ந்தர்.மறுநாள் காலை ஞானம் பெற்றார் .ஆதலினால் செயலின்மைதான் புத்தரின் ஞானத்தின் விளைவு என்று தீர்காமாகப் பேசுகிறார் லாவோ ட்சு.

இதயம் சரியாக இருந்தல் நேர் - எதிர்
வாதங்களை மறந்து விடுவோம் .

உந்துதல் இல்லை .வற்புறுத்தல் இல்லை .தேவைகள் இல்லை. ஈர்ப்புகள் இல்லை.இவைகள் யாவும் இல்லாத இடத்தில் உங்கள் விவகாரங்கள் உங்கள் அதிகாரத்தில் நீங்கள் சுதந்திர மனிதர் என்கிறார் லாவோ ட்சு.

இதை வாசிக்கும் நமக்கு ஒரு நெருடல் மோதுகிறது .அதெப்படி சித்தார்த்தர் என்ற பெயரின் பொறுளே லட்சியத்தை அடைந்தவர் என்பதாக இருக்கும் போது செயலின்மையை எப்படி நம்புவது ? சித்தார்த்தர் தான் ஞானம் பெற வேண்டும் என்ற அக மனத்தூண்டுதலினால்தான் ஞானம் பெற்றார் என்று நம்புகிறோம் .ஆனால் லாவோ ட்சு நம் ஞானம் என்பது செயலின் விளைவு அல்ல. நம் உள்ளே உறைந்து கிடக்கும் இயல்பை வெளியே இறைந்து கிடக்கும் இறைத்தனமையுடன் இணைத்துக்கொள்ளும் தன்மை என்று உணர்த்த முயற்சிக்கிறார்.

லாவோ ட்சு பற்றிய ஓஷோவின் பார்வயில் இன்னொரு அழகான அதே சமயம் வித்தியாசமான விசயம் ,”உங்களிடம் எது அழகாக இருக்கிறதோ அதை மறைத்து வையுங்கள் ”என்று சொல்லும் லாவோ ட்சுவின் போதனை .மேலும் அவர் சொல்லும் போது நாம் அதற்கு மாறான செயலில்தான் பெரும்பாலும் ஈடுபடுகிறோம் .நம்மிடம் உள்ள தவறுகளை மறைக்கிறோம் .எப்போதும் உள்ளே இருப்பது யாருக்கும் தெரியாமல் இருப்பதால் இன்னும் அதிகமாக வளர்கிறது .உங்கள் அசிங்கம் ,அவலம் ,தவறுகளை வெளிப்படுத்தினால் ஒத்துக்கொண்டால் அது நீர்த்துப் போய் விடும்.இது ஒரு ஆச்சர்யமான போதனையாக் உணரவேண்டியதிருக்கிறது.

இந்த நமது ஆச்சர்யத்தின் முடிச்சுகளை ஓஷோ ருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப் மூலம் அவிழ்க்கிறார்.”நீங்கள் குரங்காக இருப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் மனிதனாக வாழ முடியாது .காரணம் குரங்கின் குணம் அடுத்தவர் செய்வதை அப்படியே செய்வது -Aping .

மூன்றாவது காது.

ஒரு குருவின் வேலை உங்களைத் தியானத்தின் மூலம் உங்கள் இருப்பைக் கவனிக்க வைப்பது மட்டுமல்ல உங்களுக்கு உள்ளே வைத்து இருக்கும் அப்பா சொன்னார் ,அம்மா சொன்னார் குரு சொன்னார் இன்னும் யார் யாரோ சொன்னக் குரல்களின் பதிவைத் தாண்டி ஒரு வெற்றிடம் இருக்கிறது .அந்த வெற்றிடத்தை உங்களுக்குள் உருவாக்கச் செய்கிறார் குரு.அந்த வெற்றிடத்தை இயற்கைத் தன்னைக்கொண்டு நிலை நிறுத்தும் .அப்போது உங்கள் மூன்றாவது காது உருவாகும் அதன் மூலம் இயற்கையின் குரல் கேட்கும் .இவர் சொன்னார் அவர் சொன்னார் என்ற குரல்களை விரட்டி விட்டு அந்தக்குரல் மூலம் உங்கள் வாழ்வின் முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள் .அதை நம் வேதங்கள் அசரீரி என்கிறது .

இந்த மூன்றாவது குரலைக் கேடுக்கும் காதுடன் இயற்கையாகப் பிறப்பதால்தான் தாவரங்கள், பறவைகள் ,மிருகங்கள் ,புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் இவர்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ்கின்றன என்கின்றார் லாவோ ட்சு.ஆண்டவன் சொல்கிறான் அருணாச்சலம் செய்கிறான் என்ற வசனம் இப்படித்தான் பிறந்தது என்று சொல்லலாம்!

தேவைகள் - ஆசைகள்

அடுத்து ஒரு அற்புதமான நடைமுறை சிக்கலுக்கு வழி காண்பதில் லாவோ ட்சு முயல்கிறார்.சுவாசிப்பது ,உணவு ,நீர்,இவைகள் உலக உயிர்களபொதுவானவை எளிமையானவை .தேவையை இயற்கை ஏற்படுத்துகிறது .தேவைப் பூர்த்திச் செய்யப்படுகிறது .ஆனால் அதே தேவை வெறியாகும் போது ஆசையாகிறது. ஆசை வருங்காலத்தின் பொருட்டு மனம் ஏற்படுத்தும் சிக்கலான தந்திரம்.இந்தக் குணம் இருப்பதால்தான் மனிதன் தனது ஆசைகளைக் கூட்டிக்கொண்டே போய் ஒரு நாள் அதற்குள் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்டு பிறவி யின் நீட்சியைத் தொடர வேண்டியதாக இருக்கிறது.

இதைத் தெளிவு படுத்த ஓஷோ, கன்ஃபூசியசுக்குப் பின் வந்தவருள் மிகவும் முக்கியமானவர் சீனத் தத்துவஞானியான மென்சியஸ் அவர்களின் இறக்கும் தருவாயில் அவரிடம் ஒரு கேள்விக் கேட்கப்பட்டதை நினைவுப் படுத்துகிறார் .மென்சியஸ் அவர்களே உங்கள் வாழ்க்கையினை முதலிருந்து ஆரம்பிக்கும் வாய்ப்புக் கிடைத்த்தால் என்ன செய்வீர்கள் ? .அதற்கு மென்சியஸ், என் தேவைகள் மெல் கவனம் செலுத்துவேன் என் ஆசைகள் மேல் இல்லை என்றாராம் .

ஆனால் ஓஷோ சொல்லும் போது நம் தேவைகளைக் கண்டிப்பதே மதங்களின் நோக்கமாக இருக்கிறது .இயற்கை உடலின் செயல்பாடுகளுக்குத் தேவைகளை உருவாக்குகிறது.ஆனால் மதங்கள் நீங்கள் உண்பதையும் ,உறங்குவதையும் கண்டிப்பதோடு வரப்போகும் சுவர்க்கம் ,நரகம் ,முக்தி,மோட்சம்,பேரின்பம் என்ற ஆசைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறது .அதனால்தான் இந்த உலகம் அசிங்கமாக்கப்பட்டு விட்டதாக ஓஷோ ஆதங்கப்படுகிறார்.

குருவுக்கு - சிஷ்யர்களின் தேவை

ஒரு அபூர்வமான உண்மை இங்கு லாவோ ட்சு மூலம் ஒஷோவால் பேசப்படுகிறது .போதிதர்மர்த் தனது சீடன் வருகைக்காக ஒன்பது வருடம் சுவற்றைப் பார்த்துத் தீவிரமாக அமர்ந்து இருந்தவரலாறு நமக்குத்தெரியும் .அதோடு புத்தர் ,இயேசு தங்கள் வாழ்வில் சீடர்களைப் பெறுவதில் பெறுமதிப்புக் காட்டியதாகச் சொல்கிறார்.காரணம் அவர்கள் பெற்ற அந்த மெய்ஞானம் என்பது ஏற்கனவே புதைத்து வைத்து இருக்கும் புதையல் அல்ல.ஒவ்வொருவரும் தனக்குள் கண்டுபிடித்துக்கொள்ளும் ரகசியம் என்கிறார் அதாவது புத்தரோ , போதி தர்மரோ ,இயேசுவோ ,நபிகளோ தான் பெற்ற ஞானத்தை , மலர்ச்சியை என்ற உணர்வை ஒரு சீடன் மூலம் அறியப்பட வேண்டும் என்பதாலேயே சீடர்களைத் தேடுவதில் அவர்கள் அனைவரும் அக்கறை காட்டினார்கள் என்கிறார் .ஞானம் என்ற பூட்டின் சாவி நம் ஓவ்வொருவருக்குள்ளும் இயல்பிலேயே படைக்கப்பட்டு இருப்பதாகவும் அதை அவரவர் உணர வைக்கும் போதனைதான் ஞானிகளின் சீடர்களைத் தேடுவதில் இருந்து இருக்கிறது .

சமரச சன்மார்க்கம் பேசியவர் வள்ளலார் , கடை விரித்தேன்.. கொள்வாரில்லை, இதனால் கடையைக் கட்டிவிட்டேன் என்று வேதனைப்பட்டது கூட இந்த வெளிப்படுதான் என்ற வார்த்தைகள் மூலம் அறியலாம்.இன்றும் கூட நாம் உலத்தில் பல மெய்ஞானிகளின் வார்த்தைகளை விட அவர்கள் உருவச் சிலைக்கும் ,அவர்களின் போதனைகளடங்கிய புத்தக்கங்களுக்கும் அவர்கள் பெயரில் பின்பற்றபடும் வழிமுறைக்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.புத்தர் கூடத் தனக்குப் பின் தன்னை வழி படக்கூடாது என்பதைக் கட்டளையாகச் சொல்லியிருந்தார் .நாம் கேட்கவில்லை.எனவே ஞானமடைந்தவர்களுக்குக் கோவில் கட்டுவதும் ,யாத்திரைப் போவதும் ,வழிபாடு நடத்துவதும்,புனித நூல்களில் தேடுவதும் , பூசாரிகள் ,மேதைகள் இவர்களிடம் தேங்கியிருப்பதாக நம்புவது , கடலுடன் கலந்த ஒரு ஆற்றை வழிபடுவதை விட்டு விட்டு அந்த ஆறு பாய்ந்து சென்ற வற்றிப்போன ஆற்றுப்படுகையை வழிபடுவதற்குச் சமம் என்று நெற்றிப் பொட்டுக்குள் தீ மூட்டுகிறார் ஓஷோ.

பாதை சரியாக இருந்தால் - நூல் வாசிப்பு , ஒரு பாய்ந்து கொண்டு இருக்கும் நதியின் தரிசனமாக உணர முடிகிறது.

சேர்த்தவர் : krishnamoorthys
நாள் : 11-Oct-16, 5:23 pm

நதியின் தரிசனம் - ”பாதை சரியாக இருந்தால்” தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே