எனக்கென ஒரு வானம்
(Tamil Nool / Book Vimarsanam)
எனக்கென ஒரு வானம் விமர்சனம். Tamil Books Review
ஆசிரியரின் முதல் நூல். திசம்பர் 2018 , கலைநிலா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி வெளியீடு.
அறுபதுகளில் நவீன கவிதையாக புதுக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கி, சுந்தர ராமசாமி, ஷண்முக சுப்பையா, நகுலன் முதலியோரின் குருக்ஷேத்திரக் கவிதைகளில் கேரளப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவரான தாழக்குடி மா. இளையபெருமாள் அவர்கள் இயற்றிய கவிதையும் உள்ளது. அடுத்த தலைமுறையாக நாஞ்சில் நாடனின் மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி; அவரைத் தொடரும் தலைமுறையாக சிராப்பள்ளி மாதேவன். :- மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் ச.ஆறுமுகம், வேலூர்.
அருவியென சொற்கள் உயிர்ப்போடு பிறப்பெடுத்து பெருவெளியில் கலந்துவிடும் இவரது கவிதைகள், மண்ணில் காலூன்றி மரபில் வேர் பாய்ச்சிய ஆதித் தமிழ்க்குடியின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன. இயற்கை நெறியும், நடப்பியலும் இணைந்து செல்வது பேரழகு. வரம்பிலா வானில் சிறகு விரித்து, அகண்ட வெளியைத் தழுவி உயர்ந்து நிற்கும் கவிதைகள், மேலே மேலே பறந்து போய், காட்சிகளை உண்டபின் இதயக் கூட்டுக்குள் பக்குவமாய் வந்தமரும். படிமங்கள், மரபின் ஒழுங்கு ஓசை அருமை. மரபின் மெருகூட்டப்பட்ட புதுமைக் கவிதைகள். கவிஞர் சிராப்பள்ளி மாதேவனின் கவிதைகள் காலத்தின் குரல். ஓசை ஒழுங்கும், படிமங்களின் அணிவகுப்பும், சொற்களின் வீச்சும், தொன்மைக் குறிப்பும், கருத்துத் தெளிவும் இவரது கவிதைகளின் வலிமை. :- இலக்கியத் விமர்சகர் வீ.ந.சோ, திருச்சி.
காதலும், வீரமும், தமிழர் பெருமிதங்களும் நிறைந்த பாத்தொகுப்பு. பழமையைப் போற்றும் சிறந்த மொழிநடை. செதுக்கிச் செதுக்கி சொற்களுக்கு அழகூட்டுகிறார் பாவலர். முதல் தொகுப்பு என்பது வியப்பு. பாராட்டுகள். வாழ்த்துகள். :- இதழ் சேகரிப்பாளர் தி.ம.சரவணன், திருச்சி.