கர்ப்பநிலம்

(Tamil Nool / Book Vimarsanam)

கர்ப்பநிலம் விமர்சனம். Tamil Books Review
அன்று புதன் கிழமை, அதிகாலையில் பணிக்கு செல்வதற்காக பயணித்துக்கொண்டிருக்கின்றேன். தொடரூந்திலிருந்து இறங்கி, பேரூந்தில் ஏறிக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் சக பணியாளர் ஒருவர் இந்த இடத்திலிருந்து என்னோடு இணைந்து பயணிப்பார்.
“ ஒரு புதிய நாள் இன்றும் ஆரம்பம். புதிய சந்தர்ப்பங்கள் இன்றும் காத்திருக்கின்றன” என்று நோர்வேஜிய மொழியில் கூறியவாறே என்னிடம் வருகிறார். தினமும் அதிகாலையில் சந்திக்கும்போது இப்படிக் கூறுவது இங்கு வழமை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் இந்த நாட்டில்.

எப்பொழுதும் பயணத்தின்போது ஒரு புத்தகம் என் கைகளில் தவழும். அவள் ஒரு நோர்வேஜிய பெண், ஆராட்சியாளராக இருக்கிறாள். அவளும் எப்பொழுதும் ஒரு புத்தகத்தை தன்னோடு வைத்திருப்பாள். அதிகமாக நோர்வேயிய கதைப்புத்தகங்கள் வாசிப்பது என் வழக்கம். என்றுமில்லாதவாறு என் கைகளில் வேறு மொழிப்புத்தகத்தைப் பார்த்தவள். “ என்ன இது உன் மொழியில் எழுதப்பட்ட புத்தகமா? ”எனக் கேட்டுவிட்டு அதை வாங்கிப் பார்த்தவள் “ பார்ப்பதற்கு அழகான, நேர்த்தியான எழுத்து ஆனால் மொழிதான் எனக்குப்புரியவில்லை” என்று கூறி சற்று மௌனம் சாதித்தவள். “என்ன புத்தகம் இது கதையா? நாவலா? இலக்கியமா?” என்று கேட்டாள். அவளுக்கு சிறு புன்னகையை உதிர்த்த நான். “எப்படிச்சொல்ல? இலங்கையில் உள்ளூர் போர் நடைபெற்றது பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? ”என்று கேட்டேன்.” ம்ம்ம” என்றவளை தொடர்ந்து “ 1995ஆம் ஆண்டு ஒரு பெரிய நகரத்தினுடைய மக்கள் இரவோடு இரவாக ஒரே நாளில் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த நகரத்தின் பெயர் யாழ்ப்பாணம். அந்த நேரத்தில் அங்கிருந்த மக்கள், போராளிகள் அடைந்த நெருக்கடிகளையும் அவர்கள் அவற்றை எதிர்கொள்ளக் கையாண்ட வித்தைகளையும் கூறுகிறது இந்த நூல். அதைவிட போராட்ட காலத்திற்கு முன்பிருந்த, நாம் அறிந்திராத வாழ்க்கை முறைபற்றியும் தொட்டுச்சென்றிருக்கிறார் நூலாசிரியர்...

நூறுநாள் வாழ்க்கையை ஒரே நாளில் வாழ்ந்துவிட்ட அனுபவம் கிடைத்தது இந்தப்புத்தகத்தை வாசிக்கும் பொழுது. அன்பு, பரிவு, ஏக்கம், உறக்கம், தொல்லை, இயலாமை, இல்லாமை, இழப்பு, நொடிப்பொழுதின் உன்னதம், நட்பு, வயோதிபம், இளமை, வீரம், களம், எதிரி, உத்வேகம், உதவி, வாக்கு, தவிப்பு, நகைச்சுவை என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை பண்புகளையும் துல்லியமாக எடுத்தியம்புவது மட்டுமன்றி. யாழ்ப்பாண இடப்பெயர்வு கொடுத்துவிட்டுச்சென்ற எச்சங்கள்தான் நூலாசிரியர் எடுத்துக்கொண்ட கரு. நிகழ்காலத்தின் நடுவே கடந்த ஆண்டுகளின் எதிரொலியும் எதிகாலத்தின் இழப்புக்களும் நடையாடுகிறது இன்நூலில்..

உரைநடையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். உள்ளதை உள்ளபடியே கூறிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இலக்கிய நயத்தை இழந்துவிட்டிருக்கின்றது சில உரையாடல்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு இலக்கிய நூல்தான் என்று முடித்தேன்” இடைவிடாது தொடர்ந்து கூறியதை சலனமின்றி கேட்டுக்கொண்டிருந்தவள். “நீ கூறியதைப் பார்க்கும்போது வாசிப்பதற்கு மிகவும் ஆர்வமான புத்தகம் என்றே தோன்றுகிறது. நீயும் இந்த நெருக்கடிகளை அனுபவித்தாயா” என்று கேட்டாள் அவள். “இல்லை நான் இந்த நகரத்தில் இருந்தவள் அல்ல. இந்த சம்பவம் நடந்து இரண்டு வருடங்களின் பின் நாங்களிருந்த இடத்தை விட்டும் வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அந்த அனுபவம் இதிலிருந்து சற்று வேறுபட்டது. நாம் இன்னொருமுறை அதுபற்றி பேசிக்கொள்ளலாம் என்று முடித்தேன்.

இந்த புத்தகத்தை வாசித்து அந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது, அவளிடத்தில். ஆமாம்,உணர்வுகள் எப்பொழுதும் அனுபவித்துத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. ஒரு புத்தகம் ஆவணப்படுத்துதல் மட்டுமன்றி அனுபவத்தையும் பெற்றுத்தந்துவிட முடியும். எந்த இனமாக இருந்தாலும் மிகக் கீழ்த்தரமான கதாபாத்திரங்களையும், அருவருக்கத்தக்க சம்பவங்களையும் சித்தரித்திருக்கின்றது இந்த நூல் என்பதால் வயதெல்லை கவனத்தில் கொள்ளப்படவேண்டியது அவசியம்.

“ உணரப்படாதவரை உணர்வுகள் என்றும் ஊமையானவையே”
.......
யோகராணி கணேசன்
30.ஆடி.2019

சேர்த்தவர் : யோகராணி கணேசன்
நாள் : 24-Sep-19, 3:49 pm

கர்ப்பநிலம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே