புறநானூறு பாடல் 42 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிமுகம் காண்க)

இப்பாட்டின் ஆசிரியர் இடைக்காடனார். இலக்கிய வளஞ் செறிந்த பாட்டுக்கள் பல இவரால் இயற்றப் பட்டு சங்கத்தொகை நூல்களில் சேர்க்கப் பட்டுள்ளன. தக்க உவமைகளைத் தொடுத்துப் பொருள்களை விளக்குவதில் நல்ல திறனுடையவர்.

ஆசிரியர் இடைக்காடனார், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் மற்ற இரு வேந்தர் நாடுகளைக் கவரும் கருத்தினனாய் வலிமையோடு விருப்புற்று, மலை போன்ற யானையும், கடல் போலும் தானையும் கொண்டு, புலி தன் குருளையைக் காப்பது போலத் தன்னாட்டைக் காப்பதையும், அவனது விருந்து புறந்தரும் அறத்தையும் இப்பாட்டில்,

“அளவில்லாத வள்ளன்மையும், பகையை வெல்லும் போரினையும் செய்யும் பெருமைக்கு உரியோனே! உனது யானையும் மலை போலத் தோன்றும் பெருமானே!

குளிர்ந்த நீரோட்டத்தினால் எழும் சலசலப்பைத் தவிர வருந்தி, எங்கள் துயரத்தைத் தீர்ப்பாயாக வளவனே! நீ வாழ்க என்று சொல்லி நீ வழிநடத்திச் செல்லும் படையுண்டாக்கும் சலசலப்பை கனவிலும் கருதாமல் புலி பாதுகாக்கும் குட்டி போல குறையற்ற செம்மையான ஆட்சி செலுத்தி நீ மக்களைக் பாதுகாப்பதோடு பெருஞ்சிறப்புடன் புது வருவாயை உடையவன் நீ!

நெல்லறுப்பார் கடைமடையில் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும், உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமையும், கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கரும்புத்தேன் சாறும், பெரிய நீர்த்துறையிலிருந்து நீர் முகர்ந்து கொண்டுவரும் மகளிர் பறித்த குவளை மலர்களும் குறிஞ்சி முல்லையாகிய வன்புலத்திலிருந்து வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும் மருதமும் நெய்தலுமாகிய மென்புலத்து ஊர்களையுடைய நல்ல நாட்டின் வேந்தனே!

மலையிலிருந்து இறங்கி வழிந்தோடி பெரிய கடலை நோக்கி நிலஎல்லை வரை வளம் தரும் பல ஆறுகளைப் போல புலவர் யாவரும் உன்னையே நோக்கினர்.

உன் படையும் கடல்போல ஆர்ப்பரிக்கும். கூரிய நுனியினையுடைய வேலும் மின்னல் போலப் பளிச்சிடும். இவ்வாறு உலகத்திலுள்ள வேந்தர்களின் தலை நடுங்குவதற்கு ஏதுவாகிய வலிமை உடையவனாதலால், நீதான் அவர்க்குப் பரிசில் கொடுத்தற் பொருட்டு, மருந்தில்லாத கணிச்சி (மழு) என்ற போர்க்கருவியை உயிர் வருந்த சுழற்றும், கூற்றம் சினந்தது போன்ற வலிமையுடன், உனக்கு மாறுபட்ட சேரன், பாண்டியன் ஆகிய இரு வேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய். உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது. அது உனக்குப் புதியது அல்ல” என்று பாராட்டுகிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

ஆனா வீகை யடுபோ ரண்ணனின்
யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்
தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற் 5

புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே
தண்புனற் பூச லல்லது நொந்து
களைக வாழி வளவ வென்றுநின்
முனைதரு பூசல் கனவினு மறியாது
புலிபுறங் காக்குங் குருளை போல 10

மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை 15

நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
மலையி னிழிந்து மாக்கட னோக்கி
நிலவரை யிழிதரும் பல்யாறு போலப் 20

புலவ ரெல்லா நின்னோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே.

பதவுரை:

ஆனா ஈகை – அளவில்லாத வள்ளன்மையும்

அடு போர் அண்ணல் – பகையை வெல்லும் போரினையும் செய்யும் பெருமைக்கு உரியோனே!

நின் யானையும் மலையின் தோன்றும் பெரும – உனது யானையும் மலை போலத் தோன்றும் பெருமானே!

நின் தானையும் கடலென முழங்கும் – உன் படையும் கடல்போல ஆர்ப்பரிக்கும்

கூர் நுனை வேலும் மின்னின் விளங்கும் – கூரிய நுனியினையுடைய வேலும் மின்னல் போலப் பளிச்சிடும்

உலகத்து அரைசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின் – இவ்வாறு உலகத்திலுள்ள வேந்தர் களின் தலை நடுங்குவதற்கு ஏதுவாகிய வலிமை உடையவனாதலால்

புரை தீர்ந்தன்று – உன் நாட்டில் குறையில்லாத ஆட்சி நிலவுகிறது.

அது புதுவதோ அன்று - அது உனக்குப் புதியது அல்ல

தண் புனல் பூசல் அல்லது – குளிர்ந்த நீரோட்டத் தினால் எழும் சலசலப்பைத் தவிர

நொந்து - வருந்தி

களைக வாழி வளவ என்று – எங்கள் துயரத்தைத் தீர்ப்பாயாக வளவனே! நீ வாழ்க என்று சொல்லி

நின் முனை தரு பூசல் கனவினும் அறியாது – நீ வழிநடத்திச் செல்லும் படையுண்டாக்கும் சலசலப்பை கனவிலும் கருதாமல்

புலி புறங் காக்கும் குருளை போல – புலி பாதுகாக்கும் குட்டி போல

மெலிவில் செங்கோல் நீ புறங் காப்ப – குறையற்ற செம்மையான ஆட்சி செலுத்தி நீ மக்களைக் பாதுகாப்பதோடு

பெருவிறல் யாணர்த் தாகி – பெருஞ்சிறப்புடன் புது வருவாயை உடையவன் நீ!

அரிநர் கீழ் மடைக்கொண்ட வாளையும் – நெல்லறுப்பார் கடைமடையில் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும்

உழவர் படை மிளிர்ந்திட்ட ஆமையும் – உழவர்களின் ஏர் முனையில் சிக்கிய ஆமையும்

அறைநர் கரும்பிற் கொண்ட தேனும் – கரும்பு அறுப்போர் கரும்பிலிருந்து எடுத்த இனிய கரும்புத்தேன் சாறும்

பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் - பெரிய நீர்த்துறையிலிருந்து நீர் முகர்ந்து கொண்டு வரும் மகளிர் பறித்த குவளை மலர்களும்

வன் புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் – குறிஞ்சி முல்லையாகிய வன்புலத்திலிருந்து வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும்

மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந – மருதமும் நெய்தலுமாகிய மென்புலத்து ஊர்களையுடைய நல்ல நாட்டின் வேந்தனே!

மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல் யாறு போல – மலையிலிருந்து இறங்கி வழிந்தோடி பெரிய கடலை நோக்கி நிலஎல்லை வரை வளம் தரும் பல ஆறுகளைப் போல

புலவ ரெல்லா நின்னோக் கினரே – புலவர் யாவரும் உன்னையே நோக்கினர்

நீயே – நீதான் அவர்க்குப் பரிசில் கொடுத்தற் பொருட்டு

மருந்தில் கணிச்சி – மருந்தில்லாத கணிச்சி என்ற போர்க்கருவியை

(கணிச்சி - Battle-axe)

வருந்த வட்டித்து – உயிர் வருந்த சுழற்றும்

கூற்று வெகுண்டன்ன – கூற்றம் சினந்தது போன்ற
முன்பொடு - வலிமையுடன்

மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினை – உனக்கு மாறுபட்ட சேரன், பாண்டியன் ஆகிய இரு வேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்.

(பொருந, புலவரெல்லாம் நின் நோக்கினர்; நீ அரைசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்தி புரை தீர்ந்தது; நினக்குப் புதுவதன்று ஆகலின் எனக் கூட்டுக)

திணை – வாகை. போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகைத் திணை ஆகும். வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றி இப்பாடல் கூறுவதால் இப்பாடல் வாகைத்திணை ஆகும்.

துறை: அரசவாகை. 1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-13, 3:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 206

சிறந்த கட்டுரைகள்

மேலே