இஸ்லாம் என்னும் அமைதி வழி...!

தொழுகை இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. அதிகாலையில் எழுந்து ஆக்ஸிஜன் ததும்பிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் ஆழமாய் சுவாசித்து.....உடலைச் சுத்தம் செய்து தக்பீர் கட்டி...அல்லாஹு அக்பர் என்று சொல்லும் இடம் ரொம்பவே அர்த்தம் பொதிந்தது. எல்லாம் வல்ல இறையே நீ மிகப்பெரியவன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும் நான் என்னும் அகந்தை அடித்து உடைக்கப்படுகிறது. எல்லாம் வல்லதின் முன்பு நான் ஒரு துரும்பு கூட கிடையாது.. என்று பணிகையில் நான், நான் என்னும் அந்த தன்முனைப்பு ஒடுங்கியேப் போகும்....

ஐந்து வேளைத் தொழுகையின் போதும் உடல் இயங்க, மனம் பேரிறையை உள்ளுக்குள் பிரார்த்திக்க மனம் அங்கே ஒடுங்க ஆரம்பிக்கிறது. மனம் ஒடுங்க வெறுமனே உடல் இயங்க...அங்கே மிகப்பெரிய பேரமைதி உடலுக்குள் பரவி நிற்கிறது.

இந்தப் பேரமைதிதான் இஸ்லாம் ஒவ்வொரு மனிதருக்கும் பரிசளிக்கும் அதிரகசிய சாவி. அந்த சாவியைக் கொண்டு இஸ்லாத்தை திறந்து பார்த்தால் நமக்கு கிடைப்பதெல்லாம் அருட்பெரும் பொக்கிஷங்கள்தான்...

மேலோட்டமாக இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளாமல் அதன் சூட்சுமக் குறியீடுகள் உணர்த்தும் நுட்பங்களை விளங்கிக் கொள்பவர்கள்....மிக எளிதாக சிராத்துல் முஸ்தகிம் என்றழைக்கப்படும் மயிரிலும் நுண்ணிய நுட்பமான பாலத்தைக் கடந்து பெரும் நிம்மதியான பேரமைதியான சுவனத்துக்குள் நுழைகிறார்கள்.

நீங்கள் தொழுகைக்குச் செல்லும் முன் உங்கள் ஒட்டகத்தைக் கட்டிப்போட்டு விட்டு செல்லுங்கள் என்று ஒரு நபி மொழி இருக்கிறது என்று சொல்வார்கள்...

அறிவின் மார்க்கத்தை தெளிவாக விளங்கிக் கொள்கையில்...வாழ்க்கை அழகாகிப் போகிறது...!

எழுதியவர் : Dheva.S (24-Sep-13, 4:14 pm)
பார்வை : 163

சிறந்த கட்டுரைகள்

மேலே