முத்தொள்ளாயிரம் - சேரன் 7 - நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
(ய் இடையின ஆசு, ம, ணி மெல்லின எதுகை)
கடும்பனித் திங்கள்தன் கைப்போர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி – நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றவென் நெஞ்சு! 7
பொருளுரை
பனி பொழியும் மாதம் இது. கையைப் போர்வையாக்கிக் கொண்டு நடுங்குகிறேன். கோதை அரசன் என் நடுக்கத்தைப் போக்குவான் என்று அவனைக் காண என் நெஞ்சு சென்றது. அவன் கோட்டை வாயிலில் அது நின்று கொண்டிருக்கிறது போலும். என்னைப் போலவே கையைப் போர்வையாக்கிக் கொண்டு நிற்கிறது போலும்.
கோதை பெருஞ்சினம் கொண்ட வேல்வீரன். பச்சைக் கல் பதித்த பூணாரமும், பூ மாலையும் அணிந்திருப்பவன்.