1996 - எரியும் வினாக்கள்

புதிய பொருளாதாரம்
கதவு திறப்பது புன்னகை உற்பத்திக்கா!
அழுகைக்குத்
தேசத்தை
எழுதிக் கொடுக்கவா?
சந்தைப் பொருளாதாரச்
சாதனையால் என்ன நடக்கும்?

கங்கை காவேரி அலைகள்
டாலர் பவுண்டுகள்
கொழிக்குமா?
இல்லை;
கரைகளில் இந்த தேசமே
திருவோடாகி நொறுங்குமா?

தாராள மயத்தின்
தாமரைக் கண்களில் எரியப் போவது
விடியல் திரிகளா? ஈமத் திரியா?
இன்னும் ஒரு தேர்தல்!

ஆமாம்; அது
என்ன கிழிக்கப் போகிறது?
கட்சிகளால்
பால்வினை நோய் பரவாமல் தடுக்க
என்ன காப்புறையைத்
தேர்தல் நாயகி வைத்திருக்கிறாள்?

நச்சு வாக்குச் சீட்டுகள்
விழுந்து விழுந்து அவள் கருப்பையே
நரகமானது!

தேர்தல் முடிவுகளில்
தேசம் எதைத் தேடுகிறது?
வாய்மையின் கையில்
செங்கோலையா?
நேர்மையின் கையில்
பதவிகளையா?
நீதியின் கண்களுக்குள் மக்களின்
நிம்மதியையா?

தேர்தல் முடிவுகளில்
எங்கள் தமிழ்த்தாய் எதைத் தேடுகிறாள்?
இடுப்புச் சேலையையும்
இன்னொரு மொழியிடம் இழக்கப்
போகிறாளா?
நிர்வாணக் கயிற்றின் சுருக்கில்
நிம்மதி கேட்கப் போகிறாளா?

காவிரியில்,
அலைகள் வருமெனக்
காத்திருக்கிறாளா?
மரண
வலைகள் வருமென
மறுகுகின்றாளா?

எதைத்
தமிழன் எதிர்பார்க்கிறான்?
நேற்றின் அத்திகளையா?
இன்றின் அரும்புகளையா?

சிங்கள வெறியர்களால்
அழிகிறது ஈழத்தமிழினம்!
இங்குள்ள தமிழன்?

நம்பிக்கைகள்
கறுத்துப் போகவோ சூரிய வெளிச்சம்?
பாடல்கள்
கிழிபட்டுச் சாகவோ இராக வெள்ளம்?

கால்களின் கழிவு
கழிந்த நடைகள்...
மூளையின் கழிவு
முடிந்து போன எண்ணங்கள்!

எப்படி நடக்கப் போகிறான்
எங்கள் தமிழன்?
எப்படிச் சிந்திக்கப் போகிறான்
எங்கள் தமிழன்?

இன்றுகளைத் திறந்து
ஆயுதம் எடுப்பானா?
நாளையின் மார்பில்
மாலை சூட்டுவானா?

எதைச் செய்வான்?


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:11 pm)
பார்வை : 22


மேலே