குக்கூ! என்றது கோழி

(1) காலையும், பகலும் கையறு மாலையும்,
ஊர்துஞ்சு யாமமும், விடியலும், இன்றுஇப்
பொழுதுஇடை தெரியின், பொய்யே காமம்;
மாவென மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே - பிரிபுதலை வரினே!

(குறுந்தொகை: பாடல்: 32 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்)

(2) குக்கூ என்றது கோழி; அதன்எதிர்
துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம் -
தோள்தோய் காதலர் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தென்றால் எனவே!

(குறுந்தொகை:பாடல்:157 பாடியவர்:அள்ளூர் நன்முல்லையார்)
பொருள்விளக்கம்:
(1) ஊர்துஞ்சுயாம=ஊர் உறங்குகிற இரவுப்பொழுது.
பொழுதிடை தெரியின்= பொழுதுகளின் தன்மை தெரியுமானால்
மா=பரி அல்லது குதிரை. மடல்=பனைமடல், மறுகில்=தெருவில்

(2) துட்கென்று=அதிர்ச்சியால் திடுக்குற்று
தோள்தோய்=தோளைத் தழுவிக்கிடத்தல்
வைகறை=விடியற்காலை
தும்பை மலர்; மாரியெனப் பொழிவதுபோல்
துறவிகளின் வெண்தாடி, தரையளவு நீண்டதுபோல்
தூய நல்லருவி வழிந்தோடும் கனையொன்றில்
தோகையவள் நீராடித் துள்ளியோடி
துகில் நனைந்த காரணத்தால்
கட்டழகு உடல் முழுதும்
கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பதுபோல்
காட்சி தந்தாள்; அவ்வேளை;
கண்டயர்ந்தான் ஒரு காளை!

"மலர்ந்த தாமரைப் பூக்கள் இரண்டு
மார்பினில் தலைகீழாய்க் கவிழ்ந்ததுவோ? அவற்றின்
தண்டுகள், அடிவரை வெட்டுண்டு
வண்டுகள் போலக் குந்தியதோ? - கருங்
காம்பிரண்டு கொண்டுருண்ட கனிகுலுங்க
கவர்ச்சிக்கோர் கொடுமுடியாய் நிற்கின்றாளே!
சிலந்திவலை இழையெடுத்து நெய்திட்ட சேலை எழில்
சிந்த அவளுடுத்தி எறிகின்றாள் விழிவேலை!
வாழைத் தண்டெடுத்து வடிவமைத்த தொடையினிலே
தாழை மலர் நிறமெடுத்துத் தடவியது யாரோ?
சந்தன வண்ணத்து மெழுகு கொண்டு - இந்தச்
சுந்தரச் சிற்பத்தைப் படைத்திட்ட இயற்கைக்கு,
கோடிப்பொன் சிற்பத்தைப் பரிசாகக் கொட்டிக் கொடுத்தாலும் அப்பரிசு;
மூடித்திறக்கும் அவள் இமையிரண்டின் அழகுக்கு ஈடாமோ?"

ஆடிப் போனான் காதலன் வேட்கையினால் அவ்விளைஞன் - அவளோ,
ஓடிப்போனாள்; ஒளிந்தொருவன் தன்னையே பார்த்தல் கண்டு!
விண்மீன் வானத்தில் வீழ்கின்ற வேகத்தைக் கண்டுள்ளான்;
தண்ணிலவு, தடால் எனப் பாய்ந்து மறைகின்ற காட்சியினைக்
குன்றருவிப் பக்கமுள்ள பாறையின் பின்னிருந்து
இன்றவன் கண்டான் நேரில்!
உயிரையும் நினைவையும் அங்கு விடுத்துத் தன்
உடலை மட்டும் ஏற்றிக்கொண்டான் தேரில்!

மறுநாளும் அவன் வந்தான் அருயோரம்;
மறதியினால் விட்டுச் சென்ற தன்னுயிரைத் தேடி!
உயிர் மட்டுமா கிடைத்ததங்கே - அந்த
உயிர் போன்றாள் தரிசனமும் கிட்டியது!
முதல்நாள் அனுபவத்தால் அந்த அழகு ரோஜா, தோழியெனும்
முள்ஒன்றைப் பாதுகாப்புக்கு அழைத்து வந்திருந்தாள்!
பக்கத்தில் காவலாக நிற்கின்ற தோழிதனைப்
பார்த்த வீரன் முதலில் பயந்தான் எனினும்
பக்குவமாய் அந்தப் பாங்கி மூலம்
பாவையினைப் பெறலாமெனக் கணக்கிட்டான்.

தோழி வாழும் இடமறிந்து
கோழி கூவுதற்கு முன் அவள் வீடு சென்றான்.

"எதற்காக வந்தீர்?" எனச் சற்று
இடக்காகத் தோழி கேட்க; "யாரும்
பறிக்காத மலராம் உன் தலைவிதனை
மறுக்காமல் அவள் பெற்றோர் எனக்களிக்க
உன் துணையை வேண்டி வந்தேன்
ஊண் உறக்கமின்றி அலைகின்றேன்" என்றான்.

"தாய்தந்தை விருப்பம் பின்னர் - முதலில்
தளிர்க்கொடியாம் என் தலைவி விரும்பவில்லை உம்மை!
தடம்பார்த்து நீர் திரும்பிச் செல்வதுதான் நன்மை! - வேறு
இடம்பார்த்துக் கொள்வீர், காதல் வலைவீச!" என்றாள்.

"ஏன் என்னை வெறுக்கின்றாள் என்று
கூன்பிறையை நெற்றியாகக் கொண்டவளைக் கேட்டறிய
நான் சற்று அவளருகே செல்வதற்கு அனுமதிப்பாய் தோழி!
மான் விழுங்கும் புலியல்ல நான்! நீ வாழியவே வாழி!" என்றான் அவன்.

"தனித்தொரு பெண் நீராடுமிடத்தில் குறும்பு செய்தல்
தக்கதோர் பண்பாடன்று - இது தலைவியின் கருத்து" என்றாள்.

"பனித்துளியில் குளிக்கின்ற பூ ஒன்றைப் பார்ப்பது போல் பார்த்து விட்டேன்
இனித் தவறு செய்யமாட்டேன் இரக்கம் கொள்ளச் சொல்க!" என்றான்.

"என்னடி பேச்சு அவரோடு" எனச் சிறப்
பொன்னடி சிவப்பேறப் பூமேல் நடந்து
சின்ன இடை மின்னல் ஒளிப்பாவை;
மன்னர் மகள் போல மமதையுடன் சென்றுவிட்டாள்!

கன்னியொருத்தியின் கடுமொழியும்
காதல் வயப்பட்ட காளையர்க்குக்
கற்கண்டாய் இனிக்குமன்றோ? - "என்
ஆவிதனைத் திருகிக்கொண்டு போகின்றாள்;
பாவியெனக்காக உருகி அருள்பாலிக்கச் செய்" என்றான்!

"தலைவியொரு முடிவெடுத்தால்
தலைபோக நேரிடினும் மாற்றமாட்டாள் - உமது
தவம் பலிக்குமா - பார்ப்போம்" என்று
தாவிப் பாய்ந்தோடித் தலைவியுடன் சேர்ந்துகொண்டாள்!

அந்திமாலை வருமட்டும் அங்கேயே தனியாக நின்றான்;
அதன்பின்னர் தோழி இல்லம் நாடிச் சென்றான்.

"கொய்யாப்பழம் தின்ன வரும் அணிலே கேள்!
மெய்யாகத்தான் கூறுகின்றேன், என் தலைவி மெய்தீண்டல்
முயற்கொம்பே!" என முடிவுரைத்தாள்!

கயல்நிகர்த்த விழியாளின் காலைத்தான் பிடிக்கவில்லை அவன்;
"தோழிப்பெண்ணே! தொல்புவியின் இன்பமெலாம்
தொகுத்தளித்தாலும் தொடமாட்டேன்!
ஆழிசூழ் உலகனைத்தும் ஆள்க என
அனுமதித்தாலும் ஏற்கமாட்டேன்!
இனி அவளில்லா வாழ்வெனக்கு,
இலுப்பைப்பூ! எட்டிக்காய்! அறிக!" என்றான்.

"காலையென்றும் மாலையென்றும்
காரிருள் என்றும் கடும்பகல் என்றும்
பாராமல் எனை வருத்திப்
"பாங்கி விடுதூது" நடத்தப் பார்க்கின்றீர்!
வேறுமக்கு வேலையேதும் கிடையாதோ? இறுதியாகக்
கூறுகின்றேன், போய்விடுக!" என்றாள்.


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 7:17 pm)
பார்வை : 493


பிரபல கவிஞர்கள்

மேலே