எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 *யானை தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்...

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

        *யானை தினம்*

    படைப்பு *கவிதை ரசிகன்* 
                 குமரேசன்

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

ஆசியாவில்
ஒரு இனம் 
ஆப்பிரிக்காவில் 
ஒரு இனம் என 
இரண்டு இனமாக 
குடும்பம் நடத்துகின்றது..... 

உருவம் 
கருங்கல்பாறை போல் இருந்தாலும் 
உள்ளம் என்னவோ 
இலவம் பஞ்சை விட 
மென்மையானது.......
 
காலங்கள் மாறினாலும் 
இது கலாச்சாரம் மாறாமல்
கூட்டுக்குடும்பமாகவே 
வாழ்ந்து வருகின்றது..... 

யானை
மிகவும் புத்திசாலியானது...
இருக்காதா என்ன ?
மண்ணில் வாழும்
உயிரினங்களிலேயே 
பெரிய மூளையை அல்லவா
பெற்றுள்ளது......!!!

தரைவாழ் விலங்குகளிலேயே
அதிக ஆண்டு வாழக்கூடியது.... 
வாழாதா என்ன ?
ஒரு நாளைக்கு
30 கிலோமீட்டர்
நடை பயிற்சி செய்கிறதே.... !!!

மனித இனம் முதல்
சிங்கம் இனம் வரை 
குடும்பம் என்றாலே !
பெண்ணே !
தலைமை தாங்கி 
நடத்துவது போல் 
யானை குடும்பத்திலும் 
பெண் யானையே 
வழி நடத்தும்....!!!.

ஓராயிரம் மனிதர்களின்
ஒனறுசேர்ந்த கைகளை விட 
ஒரு தும்பிக்கையின் 
வலிமை அதிகமே....!!!

இதன் வயிற்று சிப்பிக்குள் 
கன்று முத்துக்கள் உருவாக 
22 மாதங்கள் 
எடுத்துக் கொள்கிறது..... 

"கண்டதைத் தின்றால்
குண்டாவன் " என்ற 
பழமொழி உண்மைதான்..... 
இது ஒரு 
நாளைக்கு 
140 கிலோ உணவு சாப்பிட்டு
200 லிட்டர் தண்ணீர் 
குடிப்பதால் தான் 
குண்டாக இருக்கின்றதோ......? 

யானை காதாட்டுவது 
எறும்பு வாலாட்டுவதை
தடுப்பதற்கு அல்ல.... 
தன் உடல் வெப்பநிலையை 
நிலை நாட்டுவதற்கே.... !!

யானை தன் மீது 
மண்ணையோ 
சேற்றையோ 
போட்டு கொள்வது
மனிதனைப் போல் 
அறியாமையால் அல்ல..... 
சூரிய ஒளி 
கதிர்வீச்சுகளில் இருந்து 
அதிக உணர்வுள்ள தோலை
அறிவியல் பூர்வமாக 
பாதுகாத்துக் கொள்ள......

யானை 
தோட்டத்தை அழிக்கிறது
தோப்புகளை அழிக்கிறது
குடியிருப்புகுள்  வருகின்றது  என்று
புகார் செய்கிறான் 
அதன்
வாழிடத்தை 
இவன் அழித்ததை 
அது யாரிடம் 
புகார் செய்வது  ?

பணத்திற்காக 
இதனை 
மனிதன் வேட்டையாடும் போது 
தன் வாழ்விற்காக 
இது 
மனிதனை வேட்டையாடுவதில்
என்ன தப்பு.....? 

அதற்கு மதம் 
பிடிக்காமல் தான் 
சிலையை தள்ளிவிட்டு 
உடன் இருப்போரை 
தூக்கிப்போட்டு மிதிக்கிறது
இவர்களோ
 யானைக்கு 
"மதம் பிடித்தது
மதம் பிடித்தது" என்று
கூக்குரல் இடுகின்றனர் 
என்ன ஒரு அறியாமை....? 

கோவிலில் 
சாமியைச் சுமக்கச் சொல்கிறார்கள்....
யானையே
ஒரு "சாமி" தான் என்று 
அறியாமல்......!!!

        *கவிதை ரசிகன்*


🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

நாள் : 12-Aug-25, 11:17 pm

மேலே