ஆனாலும் மக்கள் வயிறு காயுது

உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா
உதவி செய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா

உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லவனென்றுன்னை
நடுவில் வைத்துப் போற்றுமடா

இன்ப உலகில் செல்வம் அதிகம்
இதயந்தான் கொஞ்சம் - அன்பு
இதயந்தான் கொஞ்சம்
இதயமுள்ள மனிதன் கையில்
உதவும் பொருள் பஞ்சம் - இன்று
உதவும் பொருள் பஞ்சம் (இன்ப உலகில்)

இரக்கம் கொண்டவனைச் செல்வம்
எதிரி யென்றே சொல்லுதடா
இல்லையென்றே ஏங்கும் நிலையில்
எட்டியுதைத்தே தள்ளுதடா (இன்ப உலகில்)

தேனாறு பாயுது - வயலில்
செங்கதிரும் சாயுது - ஆனாலும்
மக்கள் வயிறு காயுது - அதிசயந்தான் இது
வகையாக இந்த நாட்டில் என்று
மாற்ற முண்டாகுமோ? - கலைந்த
கூட்டம் ஒன்றாகுமோ? (இன்ப உலகில்)


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:49 pm)
பார்வை : 144


பிரபல கவிஞர்கள்

மேலே