நிலவும் நட்சத்திரங்களும்!!

மழை கொடுத்து
மண் காக்கும்
மாரி அம்மன்
திருவீதி உலா வரும் – ஒரு
சித்திரை திருநாளில்,

மழை கழுவிய
தார் சாலை போல்,
வாசல் தெளித்த வீதியில்,

அள்ளி செருகிய சேலையோடு
நீ போட்ட
புள்ளி கோலத்தின் முன்
உற்சவ அம்மனே
சற்று நேரம்
நின்று சென்றதை
பார்த்து விட்ட வானம்

தானும் புள்ளி மட்டும்
வைத்து விட்டு
கிண்ணம் நிறைய மாவோடு
உனக்காக காத்திருக்கிறது
கோலமிட
கற்றுத் தர நீ
வருவாயென
நிலவும் நட்சத்திரங்களுமாய்!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 3:31 pm)
பார்வை : 0

மேலே