முரண்பாடுகள்

போதிமரம் போதும்
புத்தனைப் புதைத்துவிடு

கொடிகள் காப்பாற்று
தேசத்துக்குத் தீயிடு

சின்னங்கள் முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு

கவிஞனுக்குச் சிலை
கவிதைக்குக் கல்லறை

உரைபோதும் பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களுக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம்செய்
நீதிக்குக் குப்பைக்கூடை

கற்றது மற
பட்டத்துக்குச் சட்டமிடு

பெட்டி தொலைத்துவிடு
சாவிபத்திரம்

தலைவனைப் பலியிடு
பாதுகை வழிபடு

அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டு

பத்தினிக்கு உதை
படத்துக்குப் பூ

காதல் கவியெழுத
காமம் நாமெழுத

கற்பு முக்கியம்
கருவைக் கலை

பசியை விடு
கடிகாரம் பார்த்துண்

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களைக் கொன்றுவிடு

முரண்பாடே நடைமுறையாய்
நடைமுறையே முரண்பாடாய்ச்
சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
முரண்பாடெனக்குள் யாதென்று
மூளைபுரட்டி யோசித்தேன்

மிருகத்தைக் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன்


கவிஞர் : வைரமுத்து(26-Oct-12, 3:46 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே