இதனால் சகலமானவர்களுக்கும்

மனிதர்களே!

இருபத்தோராம் நூற்றாண்டின் கருக்கலில் நாம் இருக்கிறோம்.
இனி நம் பகலுக்குச் சூரிய வெளிச்சம் மட்டும் போதாது.
இந்த ஞாலம் துலங்க ஞாபதீபம் ஏற்றுங்கள்.

உதிரும் பழமைகள் உதிரட்டும்.
துளிர்க்கும் புதுமைகள் துளிர்க்கட்டும்.
ஆனால், பழமைகளை ஆவேசமாய்த் துறக்கும் அவசரத்தில் ஆடைகளையும் அவிழ்த்தெறிந்து விடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சிலமணி நேரங்களை அறிவுக்காகச் சேமியுங்கள்.

எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.
பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.

துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.
தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள்.

அவசரப்படாதீர்கள்
அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.
இங்கே மலர்களுக்குதான் முதல் மரியாதை.
வேர்கள் வெளிவருவதேயில்லை.

தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.

சுறுசுறுப்பாயிருங்கள்.
ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஆக்சிஜன் அதிகம்.

எல்லோரையும் மதியுங்கள்.
சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ -
எவருக்குத் தெரியும்.

உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல -ஊர் பேசட்டும்.
பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது.

இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றி வைத்திருக்கிறது.
மகிழ்ச்சி…மகிழ்ச்சி…மகிழ்ச்சியைத் தவிர இந்த விரிந்த பிரபஞ்சத்தில் வேறில்லை.

துன்பம் என்பது அறியாமை.
துன்பம் என்பது அறிவின்மை.

அறிவில் நிமிருங்கள்.
அன்பில் நெகிழுங்கள்.
உழைப்பில் உயருங்கள்.

பிறகு பாருங்கள்.

இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக் கதகதப்பாய் இருக்கும்.


கவிஞர் : வைரமுத்து(26-Oct-12, 5:49 pm)
பார்வை : 0


மேலே