மறுபடியும் வந்திருக்கிறேன்

உன் வீடுள்ள தெருவை இம்முறையும் கண்டுபிடித்தேன்
தெருமுனைக் கடையில் டீ அருந்திக் கூடுதலாக
ஒரு சிகரெட் அருந்தும் நேரமே தாமதித்தேன்
நீ பணிமுடிந்து திரும்பும்போது எதிர்ப்பட்டு விடக்கூடாது
என்பதற்காக
ஓய்வுநாளாகப்பார்த்து வந்திருக்கிறேன்

கனவில் நீ மரமாக நேற்று தோன்றினாய்
எதிர்ப்பதுபோல தழுவும் இலையடர்த்தியை விலக்கி
உடல் கீறும் கிளைகளைப் பற்றியேறினேன்
தாக்குவதுபோல் பூங்கொத்துகளை வீசி
தொட்டுக்கொள்கிறாய் என் ரத்தத்தை
உன் அடங்காத ஆசையினால் மேலும்
அவ்வளவு கிளைகள் தோன்றின - அவ்வளவையும் அணைத்து
ஆவேசமாக நான் மேலேறினேன்
பலம் தீர்ந்தும், பரவசம் மேலும் கிளைகள் கேட்கிறது.
என் களைப்பில் கவனம் வைத்து நீ கிளைப்பதை நிறுத்தினாய்
உச்சிக்கிளையில் நான் அமர விந்து பொங்கியது
உன் உடலின் ஒரு இடமும் விடாமல் அது பரவுகிறது
நீதான் தடவிக்கொள்கிறாய்
விந்து பட்ட இடமெல்லாம் நிறம் வெளிற ஒரு
ஸ்படிக மரமானாய்
உச்சிக்கிளையை மெல்ல வளைத்து
தரையில் சிந்திய ஒரு துளியையும் நீ உறிஞ்சியபோது
நாற்காலியிலிருந்து எழுந்து நிற்பதுபோல்
தரைக்கு வந்தேன்
உன் ஸ்படிக உடல் ஊடுருவி
வெளியைப்பார்த்த்துபோலவே – இந்தக்கட்டிடங்களை ஊடுருவி
உன் சமீபம் உணர்கிறேன்
எப்போதாவது நீ கனவில் வருகிறாய் – நான்
வெகுதொலைவு கடந்துவந்து இங்கு நின்றுவிட்டுப் போகிறேன்
சென்றமுறை திரும்பிப் போக முடியாமல்
அகாலத்தில் குடித்த மதுவெல்லாம் கண்ணீராய் வழிய
இந்த ஊரின் தெருக்களை விடியும்வரை
வலம் வந்த்து போலன்றி
பேருந்து நிலையத்தில் அமர்ந்து இதை எழுதக்கூடிய அளவிற்கு
துக்கம் குறைந்திருக்கிறது


கவிஞர் : யூமா. வாசுகி(6-Dec-12, 1:14 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே