என் சன்னல்கள்

என் சன்னல்களைத் திறந்தேன்
உன் முகம் கலைந்து பல்லாயிரம்
ஈசல்களாகப் பறக்கிறது
வெளிச்ச ஈர்ப்பிற்கு சன்னல்களுக்குள் நுழைபவை
என் ஓவியத்தாளின் வர்ண ஈரத்தில்
படிந்து புரள்கின்றன
அவற்றைத் தூரிகை முனையால் அகற்றுகிறேன்
விரலால் தடவி அப்புறப்படுத்துகிறேன்
காற்றூதித் துரத்துகிறேன்
இடையறாது காகிதத்தில்
ஈசல்கள் ஊர்கின்றன
நான் வரைய உத்தேசித்த்து என்னை மீறுகிறது
ஈசல்களும் நானும் சேர்ந்து வரைகிற ஓவியம்
எவ்விதம் பூர்த்தியாகும் என்று தெரியாது
எப்படியானாலும் நான்
சன்னல்களைச் சாத்தமாட்டேன்


கவிஞர் : யூமா. வாசுகி(6-Dec-12, 1:23 pm)
பார்வை : 0


மேலே