உன் நிழல்படும் இடங்களில்

மயிற்பீலியின் மேற்பகுதி ஆரம் தகதகத்தமைந்த நெற்றியில்
புரண்டு முன்கேசம் எழுதுவதற்கடியில்
இன்றியமையா வரிகளில் இதுவரையிலுமிட்ட
அடிக்கோடுகள் அத்தனையும்
நிரந்தரமாகப் படுத்திருக்கின்றன நீளப்புருவங்களாக.

கருமணிகளின் சறுக்கு விளையாட்டில்
விழிக்கு வெளியேயும் சிதறும் பனிச்சில்லுகள்.

மூடித்திறக்கும் இமைத்தொழிலால் கட்டுண்ட ஒளி
விபத்தற்ற போக்குவரத்தை வீதிக்குத் தருகிறது.

ஓருலகக் காற்று தனக்குச்சொந்தமான ஒரே வீட்டிற்கு
ஓய்வெடுத்து ஓழுங்கமைய
சன்னச் சுவாசமாய் இடையறாது வந்துபோகும்
இடுங்கிய வாசல் நாசித்துளைகள்.

வெயில் இழைக்க அழகுத்திரவியம் கன்னங்களில் நுரைக்கும்.

ஈர்ப்புக்களிம்பு மெழுகி வலை இதழ்கள் விரித்த இதழில் வந்து
சிக்கிக்கொண்ட பார்வைகள் சக்தி முழுவதையும் செலவிட்டே
சிறகுகளைப் பிரித்தெடுத்துப் போகின்றன.

கீழுதட்டு வளைவில் ஒளிந்திருக்கும்
மச்சக் கருவேடனுக்கு அந்த வினோத்த்தால் வயிறு நிறையும்.

உமிழ்நீரின் ஈர அஸ்திரத்தை உபயோகித்தே உத்தரவுகளாகின்றன,
உச்சரிப்புகள் குரல் ரதத்திலமர்ந்து

முறுவல் தலைமையேற்க பல்வரிசை விழாநாள் வணக்கம் மொழியும்.

பங்கெடுக்காமல்
பதுங்கியிருந்தே வெற்றிபெறும் விவேகம் ஈறுகளுக்கு.

ரோஜாப்பூச்சிட்ட மேலண்ணம். நாவெனத்துள்ளும் கரையாத ஓர் இதழ்.

காலத்தால் குறுகி தாடையாகத் தகவமைந்திருக்கிறது
நோவாவின் கப்பல்முனை,
காண்பவர்களுக்குள் கருணையைத் தூண்ட வேண்டி.

வழுக்குத் தோள்மேடை மையத்தில் தொண்டை மலர்க்குடுவை.

ஊடும்பாவுமாக நெஞ்சுத்துடிப்புகளைப் பிணைத்து
ஆதரவுப் பசுஞ்சைகையால் முலைகள் நெய்த போர்வை
உறக்கமாக மூடுகிறது.

துவளும் தூரிகைக்கரங்கள் – கணுக்களில் நிறத்தேக்கம் – தீண்டலில்
மண்ணிலும் மாயமாய்த் தழைக்கும் வானவில் அம்சம்.

ரத்தநாளப் படுகைகளில் வைரத்திசுக்கள் –
நகங்கள் வழியே மீறும் மிருதுக் கிரணங்கள்.

தொப்புளைப் படைத்த பெருமித்த்தால் சிருஷ்டி
செவிச்சிறப்பைச் செய்கிறபோது
கடமை முடிந்ததென காது மடல் கழிவுகளில் கையெழுத்திட்டு மறைந்தது.

இடையொடுக்கத்திற்கெதிராக
வலிவும் வடிவுமாய் வெகுண்ட தொடைகள்
இரட்டையாட்படையாக நடையெடுக்கின்றன –
யோனிக் கதுப்புகளின் தேன்நிறத் துணைகொண்டு.

பின்னலாகத் தொகுக்கப் படும்போதெல்லாம் தனிமைப்படுத்தப்பட்டு
பிணங்கிச் சுருளும் குறுமுடிகள் பிடரியில்.

அசுரப் போட்டிக்கிழுபடும் கயிறு வலிவுகளுக்கீடாகமாட்டாமல்
இற்று இரு துண்டாவதற்குமுன் பெற்ற இளமை
புறங்கழுத்தில் முதுகில் வேய்ந்த விசைமீது வெளிப்படும்
வியர்வைப்பதக்கங்களை பின்னல் வழி கடந்து
என் கவனம் கீழிறங்குகிறது.

கீழ் வயிற்று மடிப்பில் கர்வத்தைக் கவர்ந்து புகழ் மேடாகிப்போன
பின்புறங்களிலொன்று குலுங்கி மேல் நகரவும்
மற்றொன்று ஓய்வாகச் சற்று சாய்ந்தாடவும்
அடிக்கொருமுறை பணி மாற்றிப் பரிபாலிக்கும்
நடைப்போக்கிற்க்கடிமையாகி.

எங்கோ பெய்த மழை உன் பாதங்களை முகர்ந்தபடி
தவழ்ந்து வருகிறது என் வறட்சிக்கு.

உன் நிழல்படும் இடங்களில் தன் உயிர்நிலையை மாற்றி மாற்றி வைத்து
நன்மையடையத் தவிக்கிறது நிலம்.

உன் குதிகால் அழுந்திய குழிவிலிருந்து முத்தமிட்டு உறிஞ்சிய
உண்மை இக்கவிதை

உன்னைச் சொல்லித்தீராத பாடு என்னைப் பிளக்கிறது
உள் வெளியாய் ஆனது உடல்
உடலுக்கு வெளியே இலங்கும் உறுப்புகள் அனைத்திற்கும்
இயக்கம் என்பது உன்னை வியப்பது தான் அன்பே


கவிஞர் : யூமா. வாசுகி(6-Dec-12, 1:31 pm)
பார்வை : 0


மேலே