ஏழு பென்சில் சித்திரங்களும் ஒரு அழிப்பானும்

செய்தி அனுப்பிச் சொற்ப நேரமாகிறது – நீ
இந்நேரம் துடித்திறங்கி வந்திருக்க வேண்டும்
அலட்சியமா என்னிடம் – நெரிப்பேன் நின்
நீலகண்டம் சடையறுப்பேன்
நீ கெட்ட கேட்டுக்குக் கங்கை வேறு தலையில்
கேட்பதற்கு ஆளில்லை என்று
எங்காவது போய்க் கிடக்காதே
இதோ அழைக்கிறேன் வந்து நின்றி ஏவல் செய்
கொலுசணிந்த பெண் குறித்து
நான் கவிதை எழுத வேண்டியிருக்கிறது
மயானச் சாம்பலையெல்லாம்
துடைக்க மறந்து வந்தாயானால்
தொலைந்தாய் நீ
முடிவிற் சேர்ந்தேன் ஒரு காதலியின் சன்னிதானம்
பூஜை முறை எதுவுந் தெரியாத
முரடனாயிற்றே நான்
கவிதையில் என் ஆவியைக் கடத்திவைத்து
அர்ப்பணிக்க வேண்டும் அவளுக்கு
என் மொழி முதிர உதவி செய்
வசை மொழிந்தேன் என வருந்தாதே
செல்லக் கொஞ்சலை செலுத்திப் பார்த்தேன்
நான் கலைஞன், நீ கடவுள்
காலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்
உதவி செய்து ஒத்திருப்போம்
ஒருவருக்கொருவர்
என் காகிதங்களில் வந்து கட்டுண்டுகிட
வரைகின்ற வார்த்தைகளையெல்லாம்
விசையுறச் செய்
வரும்போது உன் நந்தியையும் நாகத்தையும்
அழைத்துவா –
அடிக்கடி சிகரெட்டும் டீயும் வாங்கி வர
அவையும் எனக்கு வேண்டும்


கவிஞர் : யூமா. வாசுகி(6-Dec-12, 1:36 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே