மக்கள் நிலை

சிட்டு

தென்னை மரத்தில் - சிட்டுப்
பின்னும் அழைக்கும் - ஒரு
புன்னை மரத்தினில் ஓடிய காதலி
'போ போ' என்றுரைக்கும்
வண்ண இறக்கை - தன்னை
அங்கு விரித்தே - தன்
சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் சேவலும்
செப்பும் மணிவாயால்:
'என்னடி பெண்ணே - உயிர்
ஏகிடும் முன்னே - நீ
என்னிடம் வா, எனையாகிலும் கூப்பிடு.
தாமதம் நீக்கிவிடு'
என்றிது சொல்லப் - பெட்டை
எண்ணம் உயர்ந்தே - அத்
தென்னையிற் கூடிப்பின் புன்னையிற் பாய்ந்தது
பின்னும் அழைக்கும் சிட்டு.

அணில்

கீச்சென்று கத்தி - அணில்
கிளையொன்றில் ஓடிப் - பின்
வீச்சென்று பாய்ந்து தன் காதலன் வாலை
வெடுக்கென்று தான் கடிக்கும்
ஆச்சென்று சொல்லி - ஆண்
அணைக்க நெருங்கும் - உடன்
பாய்ச்சிய அம்பென கீழ்த்தரை நோக்கிப்
பாய்ந்திடும் பெட்டை அணில்!
மூச்சுடன் ஆணோ - அதன்
முதுகிற் குதிக்கும் - கொல்லர்
காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக்
கலந்திடும் இன்பத்திலே.
ஏச்சுக்கள் அச்சம் - தம்மில்
எளிமை வளப்பம் - சதிக்
கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
கொஞ்சமும் இல்லை அங்கே!

வானும் முல்லயும்

எண்ணங்கள் போலே - விரி
வெத்தனை! கண்டாய் - இரு
கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள்
கூடிச் சுடர்தரும் வான்!
வண்ணங்களைப் போய்க் - கரு
மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை, மின்னலை, அம்முகில்
பாய்ச்சிய வானவில்லை,
வண்ணக் கலாப - மயில்
பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்!
மேல்முத்தை வான் சொரிந்தான்!
விண்முத் தணிந்தாள் - அவள்
மேனி சிலிர்த்தாள் - இதைக்
கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக்
கடல்வந்து பாய்ந்திடுதே!

மனிதர்

மஞ்சம் திருத்தி - உடை
மாற்றி யணிந்தே - கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
கோதை அழைக்கையிலே,
மிஞ்சிய சோகம்-மித
மிஞ்சிய அச்சம்-'என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதனை கொள்வாரோ'
நெஞ்சிலிவ் வாறு - நினைந்
தங்குரைக் கின்றான்: - 'அடி
பஞ்சைப் பரம்பரை நாமடிக் பிள்ளைகள்
பற்பலர் ஏதுக்’ கென்பான்.
கஞ்சி பறித்தார் - எழுங்
காதல் பறித்தார் - கெட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச்சாதிக்கு
வாய்ந்த நிலை இதுவோ!'


கவிஞர் : பாரதிதாசன்(3-Jan-13, 5:36 pm)
பார்வை : 0


மேலே