சரசுவதி அந்தாதி - கலித்துறை பாகம் 2

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே. 6

பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே. 7

இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே. 8

பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே. 9

புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே. 10


கவிஞர் : கம்பர் (11-Apr-11, 11:04 am)
பார்வை : 69


மேலே