சரசுவதி அந்தாதி - கலித்துறை பாகம் 3

ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே. 11

தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. 12

புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 13

வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே. 14

நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே. 15


கவிஞர் : கம்பர் (11-Apr-11, 11:05 am)
பார்வை : 58


பிரபல கவிஞர்கள்

மேலே