உய்தல்பெறு உடன் பிறப்பே!

பந்தியில் பந்தியில்
சக உதர, சக உதிரத்
தலை கைகால் குடல் எனச்
சிந்தச் சிந்தக்
கொய்தும் கொன்றும் குவித்தனர்

தந்தை மகளையும்
தனயன் தாயையும்
துவக்குக் காட்டிப்
புணரப் பணித்தனர்

அம்மானைப் பருவத்துச்
சிறுமியர் யோனியில்
கூர்கத்தி செருகினர்
மற்றும் போந்திரா
முலையறுத்து வீசினர்

கொதித்திலது நம்குருதி
துடித்திலது நமது தசை
வெடித்திலது நமது உளம்

தன்நூன் பெருக்கற்கு
நம் ஊண் பறித்துண்ட
மன்னர் குலம் தளைப்பட்டால்
செல்வாக்குக் கூர்ந்தர்
நோயில் வதைப்பட்டால்

நமக்கு

கூட்டுப் பிரார்த்தனை உபவாசம்
மண்சோறு முண்டிதர்
அலகு குத்தல் பால்காவடி..

பாவம் பெரிதல்லோ!
போதுமா வேண்டுதல்கள்?
போதாது, போதவே போதாது!

தெய்வம் இரங்க வேறென்ன வழி?

குறியறுத்து உதிரம் முழுக்காட்டு
தீக்குழித்துக் கருகு
பாண்டியன் ஆபத்து தவி போல்
மண்டியிட்டமர்ந்து அடிவயிற்றில்
கொலைவாள் பாய்ச்சு
வலக்கை வாளால் தன் தலை அறுத்து
இடக்கையில் ஏந்திப்
படையலிடு பாவைக்கு தம்மை எரித்த
சாம்பர் குவித்து
கோயில் விமானத்தைக்
குடமுழுக்குச் செய்

தன்மான இனமான,
செம்மொழித் தமிழனாய்
உய்தல் பெறு
உடன்பிறப்பே!


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:56 pm)
பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே