களமும் களவும்

சலவைத் தூளிட்டுத் துவைத்து
அலசி நீலமும் கஞ்சியும் முக்கி
உலர்த்தி மடித்துத் தேய்த்தனவாய்
இருந்தன உன் சொற்கள்

மாயவிரல்கள் வலித்துக் கட்டிய
இளிப்புப் போன்றதாய் புன்னகை

குலுக்கிய கையின் தணுப்பு
பிணமோ எனப் பீதி புலர்த்தியது

வாசலில் நிறுத்தி வந்த பன்னிரு
இலக்கக் காரின் கூரையில்
உதிர்ந்த செங்கொன்றை
உந்தன் முகத்தில் ஏற்றியது செம்மை

நீதான அது?
பட்டினியும் பையில் காசற்றும்
இருந்த எனக்கு கல்லூரி நாட்களில்
சோறு வாங்கித் தந்தவன்…

நீதான அது?
போகவரத் தோளுரசி
ஆறு மைல் நடந்தவன்…

பால்யத்தில் கொள்கைக் களமாடிய
உன்னைக்
களவாடிச் சென்றதெது?

காசா, கயமையா,காலமா?


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:55 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே