நகை

உன் பங்கைப் பெற்றாய் நண்பா!
வழக்கில்லை வயிறெரிவும் இல்லை
மற்று ஆயிரம் பங்கும்
அள்ளிக் கொண்டாய்
அநீதி பேராசை தன்னலம்
குற்றம் வஞ்சம்
எனப்பல‌
சொற்கள் குறித்தது பேரகாதி

அதுவல்ல எமதிழிவு
ஒத்தாரையும் மிக்காரையும்
உனைத்
துதிக்கச் சொன்னாய்
கூர்மதி போற்றல்
தியாகம்
தழும்பு
விழுப்புண் விழாதபுண்
என மாற்றுப் பெயரணிந்தாய்

தனக்கெனக்
கோடிப்பங்கு குவித்தவர்
காற்செருப்பை
நாணமின்றி நக்கினாய்

செருப்பில் பட்ட எச்சில்
துடைக்கக் கண்டும்
செம்மாந்து நடந்தாய்

மேலங்கியில் ஒளிந்திருந்த‌
துவக்கை அஞ்சுவதாய்
கர்வம் கொண்டாய் நண்ப!

அச்சமல்ல‌
மலம் மிதித்து நிற்பதாய‌
அருவருப்பு

பறிபோன நூறாயிரம் கோடிப்
பங்குக் கானவர்
உயிர் சுமந்து
துவக்குகளின் குருட்டுக்
கண்களுக்கு அஞ்சிக்
கிடப்பது அஞ்சிக்
கிடப்பது காணத்
தகிக்கிறது

காலம் கடந்தும்
மண்ணில் கிடந்தவர்
கனவும் இலாதவர்

அவர்
வெயில் கருகி நின்றார்
என உருகி
நீர்மோர் வழங்கிய‌
வள்ளலாய் இருந்தாய்
மக்கட்கு மூக்குச் சிந்தினாய்

வள்ளல் எனும் பிம்பம்
யாசித்து
நகைத்தாய்

நண்ப!

நாட்பட்டழுகிய சவத்தின்
கழுத்து மாலையென‌
மணத்தது
உன் நகைப்பு.


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 3:09 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே