யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு - உடலின் கதவு

உனது நினைவின் மதகு
ஒரு மழைக்காலத்தின் வருகையை அறிவிப்பதாய்ப்
பெருகி வீழ்கிறது என் வெயில் பிரதேசமெங்கும்
கொஞ்சமும் தளராத வேட்கையுடன்
நுரை சுழித்த திமிரில் எனது பூமியில் குழிபறிக்கிறது அது
ஒரே நாளை ஆயிரம் முறைகள் வாழநேர்ந்ததாய்ச்
சலிப்பூட்டும் அதிகாலைகளைக் கசக்கி எறிகிறது
குகையினூடே ஒளி துளைக்கும்
அதன் சீற்றத்தின் கொதிப்பு உணர்ந்தும்
கைகள் பொசுங்க அள்ளிப் பருகுகிறேன்
நெடிய மரங்களினூடே அலையும் என் பார்வை
ஓர் அற்புதமான குறிஞ்சிப்பூவைக் கண்டுகளிக்கிறது
தொடுவானத்தை இடித்துவிடாமல் இருக்கட்டும்
நமது பிரிவு
இறக்கைகள் வலைக்கண்ணிகளில் சிக்காத பறவையைப் போல
பாயட்டும் நமது உடல்விசை
சிந்தும் ஒவ்வொரு துளியும்
கடலின் கருவறையைத் தொடக்கூடும் ஒருநாள்
யோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 4:47 pm)
பார்வை : 0


மேலே