நெடுந்தீவு ஆச்சிக்கு

அலைகளின்மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற
என்னுடைய ஆச்சி

காலம் காலமாய் உன்னைப் பிடித்த
பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின
போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்
தென்னம் தோப்பு
நானும் என் தோழரும்
செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.

தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின்மேல்
காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.

என்ன இது ஆச்சி
மீண்டும் உன் கரைகளில்
நாங்கள் என்றோ விரட்டி அடித்த
போத்துக்கீசரா ?
தோல் நிறம் பற்றியும்
கண் நிறம் பற்றியும்
ஒன்றும் பேசாதே
அவர்கள் போத்துக்கீசரே.

எந்த அன்னியருக்கும் நிலை இல்லை
எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.
நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு
கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர
எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

ஆச்சி
என் இளமை நாள் பூராக
ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்
தேடிய வாழ்வெலாம்
ஆமை நான், உனது கரைகள் நீழ
புதைத்து வந்தேனே.
என்னுடன் இளநீர் திருட
தென்னையில் ஏறிய நிலவையும்
என்னுடன் நீர் விழையாட
மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்
உனது கரைகளில் விட்டுவந்தேனே
என் சந்ததிக்காக.

திசகாட்டியையும் சுக்கானையும்
பறிகொடுத்த மாலுமி நான்
நீர்ப் பாலைகளில்
கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி

நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர
எதனைக் கொண்டுநான்
மனம் ஆற என் ஆச்சி..


கவிஞர் : வ. ஐ. ச. ஜெயபாலன்(3-May-14, 4:05 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே