இறைவனிடம் ஒரு விவாதம்
ஏழைதான் நான்
இருந்தாலும் இறைவா உன்
செல்வ மாளிகையில்
சிறுபூவாய் மலரேனோ?
குளிக்கத் தெரியாத
குழந்தையொன்று தன் தாயைக்
குளிப்பாட்டி அழகு செய்யக்
குதித்துவரின் குற்றமுண்டோ?
தூயவனை என்னைத்
துலக்க வழி தெரியாமல்
தூயவனே உன்னிடத்தில்
தொலைக்க வழி தேடுகிறேன்
தண்ணீரில் போகாத
தடித்த கரைகளுண்டு
கண்ணீரில் கழுவினால்
கரையாத கரையுண்டோ?
முகம் பார்க்கும் கண்ணாடி
இங்குண்டு
எனக்கு ஒரு
அகம் பார்க்கும் கண்ணாடி
அளிப்பதற்கு மறுப்பாயோ?
எல்லையில்லா உன் புகழை
எடுத்துரைக்க வந்த சிறு
பிள்ளைதான் நான்.... எனது
பிஞ்சுமொழி கேளாயோ?
குவலயமே நன்கொடையாய்க்
கொடுத்தவன் நீ... என்னுடைய
கவலையெல்லாம் தீர இன்று
கவிதை தர மாட்டாயோ...?
என்னுடைய தகுதியினை
எண்ணி நான் பாடவில்லை....
உன்னுடைய தகுதியினை
உணர்ந்ததால் பாடுகிறேன்!
உன்னிடத்தைத் தேடி
ஓடிவர இயலேன் நான்
என்னிடத்தைத் தேடி உன்
இறையருளும் வாராதோ?
உன்னிடத்தில் என்னை
ஒப்புவித்த பின்னே
என்னுடைய குறையெல்லாம்
எனதென்ப தெவ்வாறோ?
வள்ளல் நபி கதையை
வரைகின்றேன் – காவியத்தின்
உள்ளே நீ நிறைந்து
ஒளியேற்ற மாட்டாயோ...?
தெரியாமல் நான் இந்த
தீன் நெருப்பை தொட்டுவிட்டேன்
கருகாமல் சுடர் வீசக்
கருணையினைக் காட்டாயா?