சீற்றம் என்று ஓயுமடி
#சீற்றம் என்று ஓயுமடி..?
கிழக்கிலும் மேற்கினிலும்
கேடுகள் இயற்கையினால்
இழப்புகள் கூடுதடி - கிளியே
ஏழையினம் வாடுதடி..!
எங்கிருந்தோ வந்ததணல்
எட்டுதிசைக் காட்டினிலே
பொங்கியெங்கும் பாயுதடி - கிளியே
பூமரங்கள் சாயுதடி..!
காற்றுடன் கைகோர்த்து
கனல்பூதம் சீறிவந்து
கூற்றுவனாய் ஆனதடி - கிளியே
குடியிருப்பும் சாம்பலடி..!
ஏழைபணக் காரனென
இயற்கையது பார்ப்பதுண்டோ
பாழுலகம் ஆக்குதடி - கிளியே
பச்சைமரம் வேகுதடி..!
மானுக்கு ரோமமில்லை
மயிலுக்குத் தோகையில்லை
கூனித்தான் போனதடி - கிளியே
குற்றுயிரில் வாடுதடி..
கூவுங்குயில் ராகமில்லை
கூகைகளும் காணவில்லை
தாவுங்கவி தீக்கிரையாய் - கிளியே
தத்தளிப்பில் செவ்வனமே..!
வெந்தணல் வேதனைக்கே
வெண்பனியும் வேதனைக்கே நொந்துமக்கள் வீதியிலே
-கிளியே
நூதனங்கள் காக்கலையே..!
மேலைநாடு பேரிடரில்
மீதநாடு போரிடரில்
சோலைவாழ்வு சோதனையில் - கிளியே
சோகங்கூடி தாக்குதடி..!
கடல்கரையைத் தாண்டுதடி
காடுமலை சரியுதடி
இடர்தரும் வெள்ளமடி - கிளியே
இன்னலென்று தீருமடி..!
#சொ.சாந்தி