புதுமை புரட்சி செய்
#புதுமை புரட்சி செய்
உயிரைக்கொடுத்து பெற்ற சுதந்திரம்
உயிரை எடுத்து போமோ
தயிரைப் போலே மனிதரைக் கடையும் -நிலை கடந்து வாழ்ந்திடுவோமோ..?
பூட்டிக் கிடக்கும் வீட்டின் உள்ளும்
புகுவான் திருடன் போன்று
தட்டிக்கேட்க பயந்து கிடந்தால் - நம்
தலையும் தின்பான் மென்று..!
எட்டு வழிக்கென பசுமை அழிக்க
துட்டினை பார்த்த கூட்டம் - முப்
பாட்டன் சொத்தை கொள்ளையிடும் முன்
நடத்திடு களரி ஆட்டம்..!
அதி காரம்பதவி நித்தம் ஏந்தி
அடக்கு முறைகள் கொடுமை
உரிமை இழக்கவோ வாக்கினை இட்டோம்
புறப்படு மாற்றிட நிலைமை..!
நாட்டின் நடப்பு நமக்கென்ன போச்சு
ஒழியட்டும் திண்ணைப் பேச்சு
வாக்குப்பிச்சை கேட்டு வருவான்
தெரு வாசல் வழியினை பூட்டு..!
வடக்கிலிருந்து வக்கணையாக
வந்து குவியுது கூட்டம்
இப்படி இதனை விட்டுவிட்டால் - அது
செப்படி வித்தையும் காட்டும்..!
குடியைக் கெடுக்கும் குடியெனகூறி
கூவி விற்கின்றார் - மதுக்
கடைகள் அழிக்க படையுடன் திரள்வீர்
தடையொழித்து தகர்த்திடலாம்.!
கல்விக்கு கேடு உழவுக்கு கேடு
அனைத்திற்கும் எல்லைக்கோடு
வலுக்கும் வன்மம் கூக்குரலோடு
வெற்றி எட்டும் வரைபோ ராடு..!
பதுமையாக பதுங்கி கிடந்தால்
பறி போகும் உடமை உயிரும்
புதுமையாக புரட்சிகள் புரிவோம்
எதுவும் வெற்றியில் முடியும்..!
#சொ.சாந்தி
ஆக்கம் 2018ல்