பொதுவுடமைத் தடங்களில்
#பொதுவுடமைத் தடங்களில்…!
கைப்பிடித்துக் கால் பிடித்துக்
கண்டதெல் லாம்பிடித்து
காரியங்கள் ஆற்றுகிறார் பாவிகள்..!
மெய்ப் பிடித்து உயிர்க்கொடுத்து
மேதினியில் வாழ்வின்றி
மிதியடி யானார்பாட் டாளிகள்..!
உழைத்ததனால் தேய்மானம்
உயரவில்லை உழைப்பாளி
ஒடுக்கிதான் விட்டார்கள் பாவிகள்..!
பழையசோறு மிஞ்சவில்லை
பயிர்நிலமும் சொந்தமில்லை
பறிக்கின்றார் முதலைக்கூட் டாளிகள்..!
உரிமைக்குக் குரல்கொடுத்து
உழைப்பார்க்குக் கைக்கொடுத்த
உன்னதங்கள் நிகழ்ந்தந்த நாளிலே..!
ஊரை ஏய்க்கும் பேர்களுக்கு
ஊதினார்கள் சங்குகளும்
ஓடித்தான் ஒளிந்தார்க ளிருளிலே. !
கம்யூனிசம்.. மார்க்சியம்
கைப்பிடித்தார் கார்ல்மார்க்சும்
கத்தியின்றி வெட்டினாரே கொடுமையை..!
சம்பளங்கள் உயர்ந்தது
சாகசங்கள் நிறைந்தது
சத்தியங்கள் நாட்டியது பெருமையை..!
வியர்வைகள் சிந்தியோரை
வெற்றிக்கொடி நாட்டவைத்தார்
வெள்ளைமனத் தோடுநல் மனிதர்கள்..!
கயவர்களை வேரறுத்தார்
காரிருளை போக்கிவைத்தார்
காலத்தால் அழியாத புனிதர்கள்..!
மெல்ல மெல்ல நிலைமாற்றி
மென்றுவிழுங்க வரும்பேய்கள்
மேட்டுக்குடி முதலாளிக் கூட்டந்தான்..!
நல்லதடம் மாற்றிவிட்டார்
நலனெல்லாம் பறித்துவிட்டார்
நம்வழிக்குப் போட்டுவிட்டார் பூட்டுந்தான்..!
சிங்காரம் செய்வோர்க்கு
சிகரந்தான் பாழ்நாட்டில்
சீழ்ப்பிடித்தக் கூட்டத்தின் நாற்றங்கள்..!
சிங்கத்தை அசிங்கமாக்கும்
சில்லறை கள்பிடித்து
சீக்கிரமாய்க் கழுமர மேற்றுங்கள்..!
நல்தடங்கள் நாம்செல்ல
நாட்டிலுண்டு அவையெல்லாம்
நால்வகை தடங்கல்தான் நாய்களால்..!
பொல்லா தோர்ஒழிக்கப்
போடவேண்டும் காளிவேடம்
பொழுதென்றும் தொல்லைதான் பேய்களால்..!
பொங்கியெழு என்றுரைக்கப்
புரட்சியாளர் கூட்டமெங்கே
பூண்டோடு அழிந்தாரோ நாட்டிலே..!
வங்கக்கடல் அலையொன்றாய்
வானெழுந்து நின்றதுபோல்
வாருங்கள் வீரமேந்தி கூட்டிலே..!
#சொ.சாந்தி