நளன் - தமயந்தி

யார் யாருக்கோ எப்படி எப்படியோ கனவு வருகிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட கனவு ?


”நாவலந்தேயம் உயர்க” எனும் குரல்கள், வில் அம்புகளோடு ஓடும் வித்யாசமான உருவங்கள், நெருப்பில்லாமல் பெரிய பாத்திரத்தில் தயாராகும் உணவு, நீந்திக்கொண்டே யாரோடோ பேசிக் கொண்டிருந்த அன்னப்பறவை என சம்பந்தம் இல்லாமல் வந்த கனவுக்காட்சிகளில் (இன்னும் பலவும் வந்தது.ஆனால் மற்றவை எதுவும் என் நினைவில் இல்லை) மூன்று மற்றும் நான்காவது காட்சிகளை சம்பந்தப்படுத்திய போது “நளதமயந்தி” கதையோடு ஒத்துப்போனது.

இதை எழுத்துப் பதிவாக்கிட நினைத்தபோது, அதை இன்றைய கால புதுக்கவிதையில் எழுதுவதா, அன்றைய காலம் போல மரபில் முயற்சிப்பதா (முயற்சி மட்டுமே) எனக்குள் எழுந்தபோது இப்படி காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

தமயந்தியிடம் நளனைப் பற்றி அன்னம் கூறுதல்

அல்லியும் ஆம்பலும் அசைகுளத் தருகே
முல்லைகள் யாவையும் முகிழ்த்திடும் பொழுதில்
இசையுடன் கைவளை எங்கிலும் ஒலிக்க
அசைந்திடும் மயிலென ஆடிடும் எழிலே..!
நிறைவள ஆழிசூழ் நிடதநா ட்டினிலே
நிறையெனக் கண்டனை நெடும்புய நளனை..!

அன்புடன் அறனையும் ஆழ்மனம் கலந்த
தன்னிகர் அற்றதோர் பண்புடைக் குலத்தோன்
வீரமும் வேட்கையும் விழிகளில் நிறைத்த
தாரணி போற்றிடும் தகையுடை இளவல்
அறுசுவை உணவிலும் அருஞ்சுவை கலந்தே
உறுபசி போக்கிடும் உயரிணை உமக்கே..!

நளனிடம் தமயந்தி பற்றி அன்னம் கூறுதல்

நெடும்புனல் செறிந்திடும் மலைவள இளவ.!
கடும்புய வலிமையில் காணரு மறவ..!
அன்றலர் தாமரை அழகினை நிறைத்து
அன்புறு பரந்ததோர் அகமனம் படைத்து
வளம்பல கொண்டநல் விதர்ப்பநா ட்டினிலே
இளங்கொடி இருந்தனள் இணையென உமக்கே

யாழிசை குழலிசை யாவையும் பயின்று
ஏழிசை சுரங்களில் யாத்திடும் திறத்தாள்
கல்வியிற் சிறந்தொரு கலைமகள் வடிவாம்
பல்கலை அனைத்துமே பயின்றிடும் மலராள்
நல்தமிழ் நவின்றிடும் நாவளம் படைத்த
நல்தம யந்தியம் மங்கையின் பெயரே.!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (29-Jul-25, 11:15 am)
சேர்த்தது : இராசேந்திரன்
பார்வை : 38

மேலே