முத்தொள்ளாயிரம் சேரன் 18 நேரிசை வெண்பா
முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா
அரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த ஒள்வேல்
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு
வண்டாடு பக்கமும் உண்டு குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு!.18
பொருளுரை:
இதுவும் சேர மன்னனின் வீரச்சிறப்பும் வெற்றிச்சிறப்பும் கூறுவது.
அன்றலர்ந்த மலர்மாலை யணிந்த சேரன் பகையரசரை வென்று கொண்ட ஒளிபொருந்திய வேலாயுதம் ஒருபக்கம் புலால் நாற்றமும் ஒருபக்கம் குங்குமம் கலந்த சந்தனத்தின் நறுமணமும் கலந்து விளங்குகின்றது.
எனவே, அவ்வேலின்கண் நறுமணத்தை நாடிச் சுரும்புகளும் வண்டுகளும் மொய்க்கின்ற பக்கமும் உண்டு; புலாலை விரும்பிச் சிறு நரிகள் கொண்டாடும் பக்கமும் உண்டு.
சேரனது வேலின்கண் தோய்ந்துள்ள புலாலை நீக்குவதற்கும் நேரமின்றி வெற்றி கொண்டாடப் படுகின்றது; அக்கொண்டாட்டம் நடைபெறும் போதே மீண்டும் அவ்வேல் போர்முனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இடைவிடாது சேரன் போருடற்றி வென்று வருகிறான் என அவனது வீரமிகுதி கூறப்பட்டுள்ளது.
ஒள்வேல் - ஒளிபடைத்த வேல்.