சிரிப்பு.


வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

* * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை

பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

* * * * *

காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ�தி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்��றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!


கவிஞர் : வைரமுத்து(11-Apr-11, 1:28 pm)
பார்வை : 133


பிரபல கவிஞர்கள்

மேலே