தமிழீழத்தின் அழகு தனியழகு

தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள்
தாயகத்தின் பெருமை அறியும் உலகு

கடல் சூழ்ந்த யாழ்பாணம்
படகு போல் இருக்கும்!

கரை மணலில் நண்டு
ஏதேதோ கிறுக்கும்!

குடைபோலும் பனைமரம்
பார்ப்போரை மயக்கும்!

கொள்ளை அழகு என்று
உலகமே வியக்கும்!

கோணமா மலைமீதில்
அலை மோதிப் பாயும்!
கூட்டமாய் எழில் மான்கள்
கடலோரம் மேயும்!

தேன் நிலாக் காலத்தில்
கடலில் பொன் பூக்கும்!
தீந்தமிழ்ப் புலவன்கை
எழுதுகோல் தூக்கும்!

மட்டு நகர் மண்ணில்
மீன் கூடப் பாடும்!

மணல் மேட்டில் கடல் காற்றில்
தென்னை கூத்தாடும்!

பட்டிப்பளை வயல்
தங்கமாய் காய்க்கும்!
பரண்மீது உழவர்பெண்
தமிழ்ப்பாடல் கேட்கும்!

விழிகளில் வன்னி மண்
அழகள்ளிச் சொரியும்!

வேரில்லாச் செடியைப் போல்
மயிலாடித் திரியும்

எழில் தோய்ந்த மன்னாரில்
முத்துக்கள் கிடைக்கும்!

ஈழத்தின் திசை நான்கும்
ஓவியம் படைக்கும்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:32 pm)
பார்வை : 41


மேலே