மடிந்து போ!

தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும்
செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்
அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை
உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந்தும்
தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்
முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி
தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!
சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்
கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு
கொஞ்சு நற்சிறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி
தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ
எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை
முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்
கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்
உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என் வாழ்ந்தாய்!
மடிந்துபோ தமிழா!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:32 pm)
பார்வை : 36


மேலே