இரங்கல் கவிதை!

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை)


கவிஞர் : கவிஞர் வாலி(2-Nov-11, 10:55 am)
பார்வை : 300


பிரபல கவிஞர்கள்

மேலே