இருளும் ஒளியும்
வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற,
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க,
நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு ...
பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்,
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்;
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்.
''ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்?
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச்
சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி
நின்றதென்னே?'' என்று நெரித்துவிட்டார் கேள்விகளை,
இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல்,
''என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்.
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ்
வேளை எனைத்தனியே விட்டகல்வீர்'' என்றுரைத்தேன்.
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்,
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்;
முற்றும் மறந்து முமுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். ..
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்,
மண்டு துயரரெனது மார்பை யெலாங் கவ்வுவதே!
ஓடித் தவறி உடையனவாம் சொற்களெலாம்,
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்,
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் .
பேசு மிடைப் பொருளின் பின்னே மதிபோக்கிக்
கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும்
விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான்,
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
காரைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.
தங்க முருக்கித் தழல் கறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி ..
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்,
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். ...
துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ!