ராமானுஜ காவியம் - கவிஞர் வாலி

காவியத் தலைவன்.

பாவேந்தன்
பாரதிதாசன்
பாட்டில் வைத்துப்
பரவிய...

எதிராஜன் -
எனப்படும் ராமானுஜன்தான்...
அற்றை நாளில் -
அதுகாறும்...

தனியார் துறைக்குத்
தாரை வார்த்த முக்தியை -
பொதுத் துறைக்குப்
பெயர்த்து வந்தவன்;உய்வழி -
பேசிய மறைகளைப்
பெட்டியில் மறைக்காது -
தேசிய மயமாக்கி
தேசத்தவர்க்குத் தந்தவன் !

இவன்
இயற்றிய
சமயப் புரட்சி - ஓர்
இமயப் புரட்சி !
அரிசனம்;
அயல்சனம்; இரண்டும் -
சரிசனம் - என
சாதித்தது இவன் தராசு;
உடனே -
உறுமியது வைதிக மிராசு !

வர்ணங்கள் நான்கால்
வரையப் பெற்றிருந்த -
மன்பதை -
என்பதை...

ஒரே வர்ணத்தால் - இவன்
ஒஹோவென வரைந்தான்;
வழக்கம்போல் -
வைதிகன் இரைந்தான் !

இவன் -
கீழ்சாதிமேல் கைபோட்ட
மேல்சாதி; இதனை -
முதன் முதல் செய்த
முப்புரி நூல்சாதி !

தீண்டாமையைத் -
தீண்டியே கொன்றான்;
நிற்க -
நிழலற்ற...
சாயச் -
சுவரற்ற...

தெருக்குலத்தார் தம்மைத் -
திருக்குலத்தார் என்றான் !

இது மட்டுமா விந்தை?
இன்னும் இயற்றினான்
எந்தை !

காமக்கிரியை புரியும்
கணிகையர்குலப் பெண்ணுக்கு -
ஈமக்கிரியை புரிந்தான்;

புள்ளினம் யாவிற்கும்
பறந்திட இடங்கொடுக்கும் -
வெள்ளிவானாய் விரிந்தான் !

ஈர மனத்தவன்; ஈ எனாமலே -
ஈயும் இனத்தவன் !

இருக்கும் நீரெலாம் -
இரக்கும் நிலத்திற்கீந்து -
இறக்கும் மேகமும் -
இவனும் ஒன்று;
நரகம் வருமென -
நன்கு தெரிந்தும்...

ஓதற் கரிய
ஒரு மந்திரத்தை - ஊர் உய்ய

ஓதினான் கோபுர
உச்சியில் நின்று !

இது மட்டுமா விந்தை?
இன்னும் இயற்றினான் எந்தை !

முக்கா டிடுகின்ற -
முகமதியப் பெண்ணுக்கு -
நிக்கா முடித்தான் -
நாராயண னோடு;

அரங்கன்பால் -
அவளுக் கிருந்த...
அலுக்க வொண்ணாத
அன்பைக் கண்டு - அவளைத்
துலுக்க நாச்சியாய்த்
துதிக்கிறது நாடு !

ஆக -
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே...
மதப்புரட்சி செய்த
மகான்;
இவன் கைக்குள்
இருந்தது -
சண்டித்தனம் செய்த
சனாதனக் குதிரையின் லகான் !

இருபதாம் நூற்றாண்டின் - இரு
இணையற்ற சிந்தனையாளரோடு...

உவமித்து ராமானுஜனை -
உரைக்கப் போயின்...

பூணூல் -
போட்டிருந்த -
பெரியார் எனலாம்; திருமண் -
ஆறிரண்டு -
அணிந்திருந்த -
அம்பேத்கர் எனலாம் !


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 11:45 am)
பார்வை : 245


மேலே