குறளும், காவியக் கவிஞரின் வசனகவிதைப் பொருளும்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அக்கரங்களின்
ஆரம்ப மாவது
அகர உயிர்;

அஃதே போல்
அனைத்திற்கும்
ஆதியா யிருந்து
ஆக்கவல்ல...

அக்கரங்களில்
ஆரம்ப மாவது
அகில உயிர்!

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

மழை - ஒரு
மகத்தான சொல்;
மற்றவர்க்கும் - அதன்
மகத்துவம் சொல் !

உலகோர் -
உண்ணும்...

ஆகாரத்திற்கு அதுவே
ஆதார மாகும்; அங்ஙனம்
ஆதார மான அதுவே
ஆகார மாகும் !

நீருணவு;
சோறுணவு; என -
ஈருணவாய் இருப்பது மழை !

அதை -
ஏத்திப் பிழை;
ஏத்தாதிருப்பது பிழை !


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்லறம் - என
இயம்பப் பெறும் -

வாழ்க்கை
வயலில்....

அன்பும் அறனும் விதைநெல்;
பண்பும் பயனும் விளைநெல் !

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

உள்ளதை
உள்ளபடி - தன்
உள்ளத்திற்கு
உரைப்போ ரெலாம் -
உலகத்தார்
உள்ளங்களின் -
உள்ளே போய்
உட்காரலாம் !


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 11:50 am)
பார்வை : 215


மேலே