காதலற்ற பெட்டகம்

உள்ளம் உருக்கி, உயிர்உருக்கி, மேல்வியர்வை
வெள்ளம் பெருக்கியே மேனிதனைப் பொசுக்கி
ஓடையின் ஓரம் உயர் சோலைக்குள் என்னைக்
கோடை துரத்திட நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

பட்டு விரித்த பசும்புல்லின் ஆசனமும்
தொட்டுமெது வாய்வருடத் தோய்தென்றல் தோழியும்
போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும்
சந்த மகரந்தம் சாரும் சாரும் நறுமலர்த்தேன்.
தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம்
ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்!
கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப்
பட்டத்தரசாக வீற்றிருந்த பாங்கினிலே

கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே
அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத்
தேய்ந்த வழி நடந்தேன்!-காதல் திருவுருவம்!
என்று உளத்தை உறிஞ்சிவிட அப்படியே
நின்றேன் வனிதை நெடுமாதுளை அருகில்!
தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட
தீங்கனி யிரண்டு தெரிய இருக்குமெழில்
மாதுளையே, கேளாய், மலச்சோலை நீ, நான் தான்.
வாதுண்டோ என்றேன், மலர்க்கண் சிவந்து விட்டாள்!
பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல்
துள்ளிவிழுந்த சுவைத்த சுவைக் கிடையில்
தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு
மாய மருந்தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவோம்;
மாதுளமும் அங்கும் வருஷிக்கும் பேரன்பும்
தீதின்றி வாழ்க செழித்து!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:52 pm)
பார்வை : 25


மேலே