இருவர் ஒற்றுமை

எனக்கும் உன்மேல் - விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்

எனக்கு நீதுணை அன்றோ - இங்
குனக்கு நான்துணை அன்றோ - அத்தான்

இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன் செயல் இனிக்கும்
தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்

விழி தனிலுன தழகே - என்
அழ கிலுனது விழியே
தொழுத பிறகுன் தழுவல் - நான்
தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான்

நீ உடல்! உயிர் நானே - நாம்
நிறை மணமலர் தேனே
ஓய்விலை நமதன்பும் - இங்கு
ஒழியவிலை பேரின்பம் - அத்தான்


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:02 pm)
பார்வை : 47


மேலே